அதுக்கு மனசுதான் காரணம்!
ராஜ ரகசியம்
‘வயசானாலும் உன் ஸ்டைலும், அழகும் இன்னும் உன்னைவிட்டுப் போகல’ என்று ரஜினியைப் பார்த்து ரம்யா கிருஷ்ணன் சொல்வாரே… அதுபோல சிலரைப் பார்க்கும்போது மட்டும், ‘இவங்களுக்கு வயசே ஆகாதா’ என்று தோன்றும்.
இந்த பியூட்டி மேஜிக் சிலருக்கு மட்டும் எப்படி சாத்தியமாகிறது?
வயது மேலாண்மை மற்றும் வாழ்வியல் சிறப்பு மருத்துவர் கௌசல்யா நாதனுக்கு இந்தக் கேள்வி.
‘‘இளமையின் ரகசியத்துக்குப் பல காரணங்கள் உண்டு. மரபுரீதியாகவே அந்த ஆசீர்வாதம் சிலருக்குக் கிடைக்கும். முறையான உணவுப்பழக்கம், உடற்பயிற்சிகள், தகுந்த ஆடைகள் அணிவது போன்ற மெனக்கெடல்களால் சிலர் இளமையைப் பாதுகாத்துக் கொள்வார்கள். இவை எல்லாவற்றையும் தாண்டி இன்னொரு முக்கிய காரணம் இருக்கிறது. அது… மனசு!’’ என்று சஸ்பென்ஸ் வைக்கிறார் கௌசல்யா நாதன்.
தோற்றத்துக்கும் மனதுக்கும் அப்படி என்ன தொடர்பு?
‘‘ ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்ற பழமொழியைக் கேள்விப்பட்டிருப்போம். இது பொய் இல்லை.
வருத்தம், கோபம், தாழ்வுமனப்பான்மை, பொறாமை, பேராசை போன்ற எதிர்மறை எண்ணங்கள் உடலில் இருக்கும் ஹார்மோன்களிடம் சமநிலையின்மையைத் தூண்டுகிறது. இதன் எதிரொலியாக நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்பட்டு, உணவுப்பழக்கம் மாறி, தூக்கம் கெட்டு இளவயதிலேயே வயது முதிர்ந்த தோற்றத்துக்குப் பலர் ஆளாகிவிடுகிறார்கள்.
மற்றவர்களிடம் அன்பு செலுத்தி, இருப்பதை வைத்து நிறைவாக வாழ்கிறவர்களும், தன்னம்பிக்கை நிறைந்தவர்களும் அழகாகவே இருக்கிறார்கள். இளம்வயதில் இருந்த கரம்சந்த் காந்தியைவிட பொக்கைவாயோடு இருக்கும் மகாத்மா காந்தியிடம் இருக்கும்
அழகைக் கவனித்துப் பாருங்கள். அதேபோல, முகமெல்லாம் சுருக்கமாக, தளர்ந்த தேகம் கொண்ட அன்னை தெரசாவிடம் இருக்கும் அழகையும் கவனியுங்கள்.
அன்பும், கருணையும் நிறைந்தவர்கள் முதுமையிலும் அழகாகவே இருக்கிறார்கள் என்பதற்கான சிறந்த உதாரணங்கள் இவர்கள்.அதேபோல், ‘நமக்கு வயசாயிருச்சு’ என்று தேங்கிவிடுகிறவர்களும், காலமாற்றத்தில் ஏற்படும் புதுமையை ஏற்றுக்கொள்ளாமல் கற்றுக்கொள்ளாமல் ‘அந்தக் காலம் மாதிரி வருமா’ என்று புலம்புகிறவர்களும், ‘இதெல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனம்’ என்று சண்டை போடுகிறவர்களும்
முதுமையை விரைவில் அடைந்துவிடுகிறார்கள்.
இன்னும் சிம்பிளாக ஒரு விஷயம் சொல்கிறேன். கோபமாகவோ, வருத்தமாகவோ இருக்கும்போது ஒரு செல்ஃபி எடுத்துக் கொள்ளுங்கள். மகிழ்ச்சியாக, அமைதியாக இருக்கும்போதும் ஒரு செல்ஃபி எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது இரண்டையும் ஒப்பிட்டுப் பாருங்கள். அழகின் ரகசியம் உங்களுக்குப் புரிந்துவிடும்’’ என்கிறார்.ஆம்… எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்!