பிரெக்ஸிட் விளைவால் பிரிட்டனின் ஒரு பகுதி பறிபோகுமா?
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகும் நிகழ்வு இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் புதியதொரு கோணம் தலைதூக்கி இருக்கிறது. தன் நாட்டின் ஒரு பகுதியை பிரிட்டன் இழந்துவிட வாய்ப்பு உண்டா என்பதுதான் அது.
ஜிப்ரால்டர் என்பது பிரிட்டனின் ஒரு பகுதி. ஆனால் அதன் மைய நிலப்பகுதியிலிருந்து மிகவும் தள்ளியிருக்கும் ஒரு பகுதி. இதைக் கடல் கடந்த மண்டலம் என்பார்கள். ஜிப்ரால்டரின் பரப்பு 6.7 சதுர கிலோ மீட்டர். இங்கு 30,000 பேர் வசிக்கிறார்கள்.
இதன் வட எல்லை ஸ்பெயினுடன் ஆனது. ஜிப்ரால்டரை அடைய ஸ்பெயின், பிரிட்டன் ஆகிய இரண்டுமே கடந்த காலத்தில் போட்டியிட்டன. 1704-ல் நடைபெற்ற போரில் ஆங்கிலேய மற்றும் டச்சு ராணுவத்தின் வசமிருந்த ஜிப்ரால்டரை ஸ்பெயின் கைப்பற்றியது. பிறகு 1713-ல் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி இதைப் பிரிட்டனுக்கு அளித்தது. இரண்டாம் உலகப்போரின்போது ‘ராயல் நேவி’ எனப்படும் பிரிட்டிஷ் கடற்படை ஜிப்ரால்டரை முக்கிய தளமாகக் கொண்டு இயங்கியது.
ஜிப்ரால்டரின் வருங்காலம் இப்போது கேள்விக்குறியாகி இருக்கிறது.
ஐரோப்பிய யூனியனில் அங்கமாக இருந்த பிரிட்டன் தான் பிரிந்து விடுவதாகத் தீர்மானித்ததைத் தொடர்ந்து ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகள் பலவிதமாகத் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றன. இதைத் தொடர்ந்து பிரெக்சிட் (பிரிட்டனின் வெளியேற்றம்) தொடர்பான ஒப்பந்தங்களில் புதிதாக ஒரு விதியை ஐரோப்பிய யூனியன் சேர்த்திருக்கிறது. இதன்படி ஜிப்ரால்டர் தொடர்பான எல்லைப் பிரச்சினையில் ஸ்பெயினுக்கு திருப்தியில்லை என்றால் ஐரோப்பிய யூனியன் வருங்காலத்தில் பிரிட்டனோடு போடும் ஒப்பந்தங்களில் ஸ்பெயி னுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும்.
அதாவது ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் முழுவதுமாக விலகிய பிறகு இந்த இரண்டிற்குமிடையே உருவாகும் ஒப்பந்தங்கள் ஜிப்ரால்டரைக் கட்டுப்படுத்தாது. பிரிட்டனுக்கும், ஸ்பெயினுக்கும் இது தொடர்பாக ஒருமித்த கருத்து உருவானால் மட்டுமே அந்த ஒப்பந்தங்கள் ஜிப்ரால்டரைக் கட்டுப்படுத்தும் என்கிறது.
இது ஜிப்ரால்டர் மக்களை மகிழ்ச்சிப்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் பிரிட்டன் ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகியதை ஜிப்ரால்டர் ஆதரிக்கவில்லை. ஐரோப்பிய யூனியனோடு இணைந்திருக்க விரும்புவதாகவே ஜிப்ரால்டரைச் சேர்ந்த 96 சதவீத மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்பதும் அதற்கு அடுத்த நாளே ஸ்பெயினின் அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் ‘ஜிப்ரால்டரில் ஸ்பானிஷ் கொடி பறக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை’ என்று கூறியதும் குறிப்பிடத்தக்கவை. ஐரோப்பிய யூனியனுடன் புதியதொரு உறவுமுறையை ஏற்படுத்திக் கொள்ளும் திட்டங்களை ஜிப்ரால்டர் வரவேற்கிறது.
பிரிட்டனின் வெளியுறவுத்துறை அமைச்சர் போரிஸ் ஜான்சன் ஜிப்ரால்டரில் தங்களது குடியுரிமைக்கு சிறு பங்கம் வந்தாலும் பாறையின் உறுதியோடு அதை எதிர்கொள்வோம் என்று கூறியிருக்கிறார்.
கடல் எல்லை தொடர்பான பிரச்சினைகளும் பிரிட்டனுக்கும் ஸ்பெயினுக்கும் உண்டாகி வருகின்றன. கிப்ரால்டர் கடல் எல்லைப் பகுதிக்குள் நுழையும் ஸ்பானிஷ் மீன்பிடிப் படகுகளை பிரிட்டிஷ் கடற்படையினர் பிடித்து வைப்பது அடிக்கடி நடைபெறும் செய்தியாகி வருகிறது.
மே மாத இறுதியில் பிரிட்டனும் ஐரோப்பிய யூனியனும் பேச்சுவார்த்தை நடத்தும்போது ஜிப்ரால்டர் தொடர்பான புதிய விதி தொடர்பான கருத்து மோதல்கள் அதில் முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.