இனி விமான டிக்கெட் வாங்கவும் ஆதார் அவசியம்
உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்வதற்கு இனி ஆதார் எண் அவசியமாக்கப்பட உள்ளது. வெளிநாட்டு பயணங்களுக்கு மட்டும் பாஸ்போர்ட் பயன்படுத்தப்பட உள்ளது.
விமான பயணத்திற்கு ஆதார் தேவை :
இதற்காக அனைத்து விமான நிலையங்களிலும் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் முறையை கொண்டு வருவதற்கான புளூ பிரின்டை தயாரித்து தருமாறு பிரபல ஐடி நிறுவனமான விப்ரோவிடம் மத்திய அரசு கேட்டுள்ளது. இந்த அறிக்கையை மே முதல் வாரத்தில் விப்ரோ நிறுவனம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் பிறகு அனைத்து விமான நிலையங்களிலும் பயணிகளின் அடையாளத்திற்காக பயணிகள் கைரேகை பதிவு செய்யும் முறை கொண்டு வரப்பட உள்ளது. விமான பயணம் புக்கிங்கிற்கும் ஆதார் அவசியம் என்ற முறையை கொண்டு வர விமான போக்குவரத்து துறை அமைச்சகம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பாக சமீப காலமாக பல ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டன.
புதிய முறை :
இந்த புதிய முறைப்படி, பயணிகள் தங்களின் டிக்கெட் புக்கிங்கின் போது ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும். பின்னர் பயணம் செய்யும் போது தங்களின் கைரேகையை மட்டும் பதிவு செய்தால் போதும்.