புகையால் அதிக உயிரிழப்பு : டாப் 4ல் இந்தியா
புகைபிடித்தலால் அதிகமானவர்கள் உயிரிழக்கும் டாப் 4 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. இந்த பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது.
டாப் 4ல் இந்தியா :
உலகிலேயே புகைபிடித்தலால் அதிகமானவர்கள் உயிரிழக்கும் நாடுகளில் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் முன்னிலையில் இருப்பது உலக நோய் பாதிப்புக்கள் குறித்து தி லான்செட் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் மட்டும் 2015 ம் ஆண்டு புகைப்பிடித்தலால் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக 63.6 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர்.
1990 ம் ஆண்டு முதல் 2015 வரை புகைப்பழக்கம் உள்ளவர்கள் அதிகம் வசிக்கும் 195 நாடுகளில் நடத்தப்பட்ட புதிய ஆய்வில், இறப்பு மற்றும் மந்தத்தன்மைக்கு புகைப்பிடித்தல் முக்கிய காரணமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் பல நாடுகளில் புகையிலை கொள்கைகளில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. உலகில் 4ல் ஒருவர் புகைபழக்கத்திற்கு அடிமையாக உள்ளார். இவர்களில் 3ல் ஒருவர் உயிரிழப்பது தெரிய வந்துள்ளது.
இளைய தலைமுறைக்கு பாதிப்பு :
இந்தியாவில் தினமும் 5500 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் புகையிலை பொருட்களை பயன்படுத்த துவங்குகிறார்கள். சுமார் 35 சதவீதம் பெரியோர்கள் புகையிலையையே ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்துகிறார்கள். ஏறக்குறைய 25 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் 15 வயதிற்கு முன்பாகவே புகையிலையை பயன்படுத்த துவங்குகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.