தலாய்லாமா விவகாரம்: இந்திய தூதருக்கு சீனா சம்மன்
திபெத் புத்தம தலைவர் தலாய் லாமா அருணாச்சலம் வந்ததையடுத்து ஆத்திரம் அடைந்த சீனா , இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பியது
சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட திபெத்தை சேர்ந்த, 14-வது புத்த மதத் தலைவர், தலாய் லாமா. இவர் திபெத் சுதந்திரம் பெற சீனாவுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும் பிரிவினைவாதத்தை தூண்டிவிடுவதாகவும் குற்றம்சாட்டிய சீன கம்யூனிஸ்ட் அரசு 1958-ம் ஆண்டு அவரை நாட்டை விட்டு வெளியேற்றியது. தற்போது அவர் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
இந்நிலையில் இந்தியாவில் அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங்க மாவட்டத்தில் உள்ள போம்டிலா நகருக்கு வந்துள்ளார்.இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தலாய்லாமாவின் செயலால் இந்திய-சீன உறவு பாதிக்கும் என எச்சரித்தது. இது குறித்து சீன ஊடகங்கள் , சீனாவுக்கு எதிராக தலாய்லாமாவை இந்தியா பயன்படுத்தி வருவதாக செய்திகள் வெளியிட்டன.
இந்திய தூதருக்கு சம்மன்
இந்த பரபரப்பான சூழ்நிலையில், சீனாவுக்கான இந்திய தூதர் விஜய் கோகலேவுக்கு, சீன வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளதாகவும், இந்தியாவின் செயலை ஏற்றுக் கொள்ள முடியாது என கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனா வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஹூவா சியூங்க் கூறுகையில்,சீனாவின் நலனுக்கு எதிராக இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கையை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
இதே போன்று நிருபமாராவ் தூதராக இருந்த போது, 2008-ம் ஆண்டு பீய்ஜிங் ஒலிம்பிக் ஜோதியை டில்லியில் உள்ள சீன தூதரகத்தில் கொண்டுவர திபெத்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த சீனா முதன் முறையாக தனது இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பி கண்டனத்தை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.