Breaking News
மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தின் முதுநிலைப் பட்டப்படிப்புகளில் சேர்ந்து படிக்க விருப்பமா?

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ள பல்வேறு துறைகளிலான முதுநிலைப் பட்டப்படிப்புகளில் 2017 – 2018 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பல்கலைக்கழகம்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் 1965 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, மதுரையில் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகத்தில் 77 புகழ்பெற்ற துறைகளும், 20 பள்ளிகளும் இடம்பெற்றிருக்கின்றன. மேலும், இப்பல்கலைக்கழகம் 21 கல்வி மையங்களையும், 21 பகுதிக் கல்வி மையங்களையும் கொண்டுள்ளது. இப்பல்கலைக்கழகத்தின் கீழ் 24 தன்னாட்சிக் கல்லூரிகளும், 14 அரசு நிதியுதவி பெறும்கல்லூரிகளும், 33 சுயநிதிக் கல்லூரிகளும், 18 அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களும், 4 மாலை நேரக் கல்லூரிகளும், 6 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளும் செயல்பட்டுவருகின்றன.

இப்பல்கலைக்கழகத்தில் 41 முதுநிலைப் பட்டப்படிப்புகளும், 35 எம்.பில். பட்டப்படிப்புகளும், 17 பட்டயம் / முதுநிலைப் பட்டயம் / சான்றிதழ் படிப்புகளும் இடம் பெற்றிருக்கின்றன. இப்பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் கல்லூரிகளில் 66 இளநிலைப் பட்டப்படிப்பு களும் 45 முதுநிலைப் பட்டப்படிப்புகளும் இடம் பெற்றுள்ளன.

முதுநிலைப் பட்டப்படிப்புகள்
இருவகைகளான முதுநிலைப் பட்டப்படிப்புகளில், முதல் வகையில் (Category A) கணிதம் (Mathematics), இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry), கணினி அறிவியல் (Computer Science), புவியியல் (Geography), நிலத்தொலையுணர்தல் மற்றும் புவியியல் தகவல் தொழில்நுட்பம் (Earth Remote Sensing & Geo. Information Technology), சுற்றுச்சூழல் அறிவியல்கள் (Environmental Sciences) எனும் அறிவியல் முதுநிலைப் பட்டப்படிப்புகளும் (M.Sc), தமிழ் (Tamil), ஆங்கிலம் மற்றும் ஒப்பீட்டு இலக்கியம் (English & Comparative Literature) எனும் கலை முதுநிலைப் பட்டப்படிப்புகளும் (M.A), கல்வியியல் முதுநிலைப் பட்டப்படிப்பும் (M.Ed), உடற்கல்வியியல் முதுநிலைப் பட்டப்படிப்பும் (M.P.Ed) இடம் பெற்றிருக்கின்றன.

அனைத்து முதுநிலைப் பட்டப்படிப்புகளிலும் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்பெற்று, மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை அளிக்கப்படும். உடற்கல்வியியல் முதுநிலைப் பட்டப்படிப்புக்கு மட்டும் நுழைவுத் தேர்வு, செய்முறைத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வு நடத்தப்பெறும்.

இரண்டாம் வகையில் (Category B) மொழியியல் (Linguistics), கன்னடம் (Kannada), தெலுங்கு (Telugu), சமஸ்கிருதம் (Sanskrit), பிரெஞ்ச் (French), மலையாள மொழி மற்றும் இலக்கியம் (Malayalam Language & Literature), பொருளாதாரம் (Economics), வரலாறு (History), சமூகவியல் (Sociology), நாட்டுப்புறக்கலை (Folklore), அரசியல் அறிவியல் (Political Science), ஆங்கில மொழிப் படிப்புகள் (English Language Studies), மெய்யியல் மற்றும் சமயம் (Philosophy & Religion), நிர்வாகப் படிப்புகள் (Administrative Studies), மகளிர் படிப்புகள் (Women’s Studies) எனும் கலை முதுநிலைப் பட்டப்படிப்புகள் (M.A) இடம்பெற்றிருக்கின்றன.

இதே பிரிவில், கணிதப் பொருளாதாரம் (Mathematical Economics), தகவல் தொடர்பு மற்றும் இதழியல் (Communication & Journalism), ஊடகம் மற்றும் தகவல் தொடர்புகள் (Media & Communications), அமைதியாக்கம் (Peace Making), கணிப்பிய உயிரியல் (Computational Biology), மின்னணுவியல் மற்றும் கருவியியல் (Electronics & Instrumentation) எனும் அறிவியல் முதுநிலைப் பட்டப்படிப்புகளும் (M.Sc), மேலாண்மை மாலைநேரத் திட்டம் (MBA Evening Programme), வணிகவியல் (M.Com), நூலகம் மற்றும் தகவல் அறிவியல் (M.Lib.I.Sc) ஆகிய முதுநிலைப் பட்டப்படிப்புகளும், புவியியல் தகவல் அமைப்பு மற்றும் தொலையுணர்தல் செயல்பாடுகள் குறித்த மேம்பாட்டு முதுநிலைப் பட்டயம் (Advanced P.G. Diploma in Geographical Information System & Remote Sensing Applications), கடல்சார் உயிரித் தொழில்நுட்பத்திற்கான முதுநிலைப் பட்டயம் (P.G. Diploma in SCUBA Diving for Marine Biotechnology) ஆகிய பிற படிப்புகளும் இடம்பெற்றிருக்கின்றன. இப்பிரிவிலுள்ள படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு கிடையாது. இப்படிப்பிற்குத் தகுதித் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

சிறப்பு முதுநிலைப் பட்டப்படிப்புகள்
மரபணுத் தொகுதியியல் (Genomics), நுண்ணுயிரியல் (Microbiology), உயிர்வேதியியல் (Biochemistry) மற்றும் கடல்சார் உயிரியல் (Marine Biology) எனும் அறிவியல் முதுநிலைப் பட்டப்படிப்புகள் (M.Sc) இடம் பெற்றிருக்கின்றன. இப்படிப்புகளில் கடல்சார் உயிரியல் படிப்பிற்கு நுழைவுத்தேர்வு வழியாகவும், பிற படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு, கருத்தரங்கம் (Seminar) மற்றும் நேர்க்காணல் (interview) ஆகியவைகளின் மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதுபோன்று, இங்குத் தங்கும் திட்டத்திலான மேலாண்மை (M.B.A – Residential Programme), கணினிப் பயன்பாட்டியல் (M.C.A), மேலாண்மை மருத்துவமனை நிர்வாகம் (M.B.A Hospital Administration) எனும் மேலாண்மை மற்றும் கணினிப் பயன்பாட்டியல் முதுநிலைப் பட்டப்படிப்புகளும் இடம் பெற்றிருக்கின்றன. இப்படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு, குழுக்கலந்தாய்வு மற்றும் நேர்க்காணல் மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஒருங்கிணைந்த முதுநிலைப் பட்டப்படிப்புகள்
திரைப்படம் மற்றும் மின்னணு ஊடகப் படிப்புகள் (B.Tech M. Tech Film and Electronic Media Studies) முதுநிலைத் தொழில்நுட்பப் பட்டப்படிப்பு மற்றும் சுற்றுலாவியல் மற்றும் உணவக மேலாண்மை (B.B.A., M.B.A -Tourism and Hotel Management) எனும் முதுநிலைப் பட்டப்படிப்பு ஆகிய ஐந்து வருட அளவிலான ஒருங்கிணைந்த படிப்புகளும் (Integrated Courses) இடம் பெற்றிருக்கின்றன. இப்படிப்புகளுக்கு பிளஸ் டூவில் தேர்ச்சியான மாணவர்களும், இவ்வாண்டு தேர்வு எழுதியிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். இப்படிப்பிற்கு பிளஸ் டூ தேர்வு மதிப்பெண்களே அடிப்படை.

கல்வித்தகுதி
அனைத்து முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கும் இளநிலைப் பட்டப்படிப்பு கல்வித்தகுதி இருக்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பங்கள் இப்பல்கலைக்கழகத்தின் http://mkuniversity.org/ எனும் இணையதளத்திலுள்ளன. ஒருங்கிணைந்த படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் மட்டும் 2-5-2017 முதல் கிடைக்கும். விண்ணப்பங்களைத் தரவிறக்கி நிரப்பிய விண்ணப்பத்துடன் முதல்வகை படிப்புகளுக்கு ரூ.300/-, இரண்டாம் வகை படிப்புகளுக்கு ரூ.200/- மேம்பட்ட முதுநிலைப் பட்டயப் படிப்புக்கு ரூ.300/-, சிறப்பு முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கு ரூ.500/- எனவும் விண்ணப்பப் பதிவுக் கட்டணத்தினைக் கணக்கிட்டு “The Registrar, Madurai Kamaraj University” எனும் பெயரில் டிடி எடுத்து “The Registrar, Madurai Kamaraj University, Palkalainagar, Madurai 625021” எனும் அஞ்சல் முகவரிக்கு அனுப்பித்தர வேண்டும்.

எஸ்சி, எஸ்டி பிரிவினர் ஒரு பிரிவைத் தேர்ந்தெடுத்தால் விண்ணப்பப் பதிவுக்கட்டணம் கிடையாது. பல்வேறு பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கும் நிலையில், விண்ணப்பப் பதிவுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்..

விண்ணப்பிக்கக் கடைசி நாள்
முதல் வகை மற்றும் சிறப்பு முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் பல்கலைக்கழகத்திற்குச் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 14-4-2017. இரண்டாம் வகை முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்குக் கடைசி நாள்: 16-6-2017. ஒருங்கிணைந்த முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்குக் கடைசி நாள்: 31-5-2017.

நுழைவுத்தேர்வு
முதல் வகையிலான முதுநிலைப் பட்டப் படிப்புகளுக்கு 28-5-2017 அன்றும், சிறப்பு முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கு 13-5-2017 மற்றும் 14-5-2017 இரு நாட்களும் நுழைவுத்தேர்வு நடைபெறும்.. இப்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுக்கு மதுரை, சென்னை, பெங்களூரூ, ஐதராபாத், கொல்கத்தா, மும்பை, புதுடெல்லி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய 8 தேர்வு மையங்கள் உள்ளன.

மாணவர் சேர்க்கை
ஒவ்வொரு முதுநிலைப் பட்டப்படிப்புக்குமான மாணவர் சேர்க்கை வழிமுறைகளைப் பின்பற்றித் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்தப்பெறும்.

கூடுதல் தகவல்கள்
0452-2458471 (30 lines) mkuregistrar@rediffmail.com

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.