சிரிய ரசாயன தாக்குதலை பொறுத்துக் கொள்ள முடியாது: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
சிரியாவில் நடத்தப்பட்ட ரசாயன தாக்குதலை பொறுத்துக் கொள்ள முடியாது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் நடத்தப்பட்ட ரசாயன தாக்குதல் குறித்து தனியார் செய்தி நிறுவனத்திடம் ட்ரம்ப் கூறும்போது, “சிரியாவில் நடத்தப்பட்ட ரசாயன தாக்குதலில் 70 பேர் பலியானதை பொறுத்துக் கொள்ள முடியாது. குழந்தைகள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் என்னுள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்குபின் சிரியா மற்றும் அதன் அதிபர் பஷார் அல் ஆசாத் மீதான எனது பார்வை மாறியுள்ளது.
சிரியாவில் உள்ள அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் கொடூரமான தாக்குதல். ரசாயன தாக்குதலுக்கு உள்ளான மக்களின் பாதிப்பை நான் பார்த்தேன். அவர்களின் மரணம் மனிதத்தின் மீது நிகழ்த்தப்பட்ட அவமரியாதை பார்க்கப்படுகிறது. மத்திய கிழக்கு நாடுகளுக்கு இது துயரமான நாட்கள் ஆகும். என்னால் பேச முடியவில்லை.
சிரியாவில் நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதலுக்கு அமெரிக்கா தனது நட்பு நாடுகளுடன் இணைந்து உலகளாவிய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது” என்றார்.
ஒபாமாவே காரணம்
சிரியாவில் நடத்த ரசாயன தாக்குதலுக்கு அமெரிக்கா வருந்துவதற்கு முன்னாள் அதிபர் ஒபாமாவின் ஆட்சியில் நடந்த குளறுபடிகளே காரணம். சிரியாவில் நடக்கும் தாக்குதலுக்கு ஒபாமாவே பொறுப்பு என்றும் ட்ரம்ப் குற்றச்சாட்டினார்.