மத்திய தரைக்கடலிலிருந்து சரமாரியாக சிரியாவுக்குள் பாய்ந்த அமெரிக்காவின் டோமஹாக் ஏவுகணைகள்!
அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் சிரிய விமானப்படைத் தளத்தில் உள்ள ரசாயன ஆயுதக் கிடங்கு அழிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன
சிரியா விமானப்படைத்தளம் மீது அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அங்கிருந்த ரசாயன ஆயுதக் கிடங்கு அழிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. சிரியா நடத்திய ரசாயன ஆயுத தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. சிரியா நாட்டில் உள்நாட்டுப் போரினால் பெரும் பாதிப்புக்குள்ளான மக்கள் தங்களது வீடுகளையும், இருப்பிடங்களையும் விட்டு புலம்பெயர்ந்து உள்நாட்டிலேயே அகதிகள் முகாமில் தங்கியுள்ளனர். சிரியாவில் அரசுக்கு எதிராக செயல்படும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாதிகளை குறிவைத்து அரசுக்கு ஆதரவான விமானப்படையின் போர் விமானங்கள் செவ்வாய்கிழமையன்று ரசாயன ஆயுதங்களை வீசி தாக்குதல் நடத்தியது. நடத்தப்பட்ட நரம்பு மண்டலத்தைப் பாதிக்கக்கூடிய ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டனர்.
இந்த விஷவாயு தாக்குதலில் 20 குழந்தைகள், பெண்கள் உள்பட 72 பேர் உயிரிழந்ததாக மேற்கத்திய ஊடகங்கள் குறிப்பிட்டு வருகின்றன. ரசாயன வெடிகுண்டுதாக்குதலில் உயிரிழந்த குழந்தைகளின் புகைப்படங்கள் உலகை உலுக்கிய நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இச்சம்பவம் தொடர்பாக கடுமையான கருத்துக்களை தெரிவித்தார்.
அமெரிக்கா பதிலடி சிரியாவில் நிகழ்த்தப்பட்ட ரசாயன வெடிகுண்டு தாக்குதல் எந்த நிலையிலும் சகித்துக் கொள்ள முடியாது எனவும், சிரியா மீதான தன்னுடைய பார்வை மாறியுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிய நிலையில் இன்று 50க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை சிரியா விமான தளம் மீது அமெரிக்கா ஏவியுள்ளது.
ஏவுகணைத் தாக்குதல் கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள சிரியா கடற்படைத் தளத்திலிருந்து 50 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக பெண்டகன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தத் தாக்குதல் உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணிக்கு நடந்துள்ளது. 50க்கும் மேற்பட்ட டோமஹாக் ரக ஏவுகணைகளை ஏவி அமெரிக்கப் படையினர் தாக்கியுள்ளனர். ஹாம்ஸ் நகருக்கு அருகில் உள்ள விமானப்படைத் தளம் குறி வைக்கப்பட்டது.
ரசயான ஆயுதங்கள் அழிப்பு கிழக்கு மத்திய தரைக் கடலில் உள்ள அமெரிக்க கடற்படைக் கப்பல்களிலிருந்து இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலில் சிரிய விமானப்படைத் தளத்தில் உள்ள ரசாயன ஆயுதக் கிடங்கு அழிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த கிடங்கிலிருந்துதான் ரசாயன ஆயுதங்கள் சிரிய ராணுவத்தின் கொடூரத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.