செல்பி’ எடுக்காதீங்க: ஆதார் ஆணையம் உத்தரவு
பிரபலங்களுக்கு ஆதார் எண் வழங்குவதற்காக பதிவு செய்யும்போது, அவர்களுடன் செல்பி எடுத்துக் கொள்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என, ஆதார் பதிவு நிறுவனங்களுக்கு, தேசிய தனித்துவ அடையாள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
சமீபத்தில் கிரிக்கெட் வீரர் தோனியின் வீட்டுக்கு சென்று ஆதார் பதிவு செய்த ஊழியர், அவருடன் எடுத்துக் கொண்ட செல்பி படத்தை, சமூகவலை தளங்களில் வெளியிட்டார். மேலும், படிவத்தில் இருந்த தோனியின் விபரங்களையும் வெளியிட்டார். இதனால், ஆதார் விபரங்கள் பாதுகாப்பு குறித்த கேள்வி எழுந்துள்ளது. அதைத் தொடர்ந்து, ஆதார் விபரங்களை பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு, ஆதார் வழங்கும், தேசிய தனித்துவ அடையாள ஆணையம் புதிய உத்தரவுகளை பிறப்பித்துஉள்ளது.
அதில் கூறியுள்ளதாவது: பிரபலங்களின் ஆதார் பதிவு செய்யும்போது, அவர்களுடன் செல்பி எடுத்துக் கொள்ள வேண்டாம். ஒருவர் மீது நமக்கு அபிமானம் உள்ளது என்பது வேறு; பணி என்பது வேறு. இதுவரை, 113 கோடி பேருக்கு ஆதார் வழங்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்படும் தகவல்களின் ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டும். அதனால், இதுபோன்ற பிரபலங்களின் விபரங்களை பதிவு செய்வதில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.