அதிநவீன ஏவுகணைகள் வழங்க இந்தியாவுடன் இஸ்ரேல் ஒப்பந்தம்
இந்தியாவுக்கு ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பில் அதிநவீன ஏவுகணைகள், தொழில்நுட்பங்களை வழங்க இஸ்ரேல் ஒப்பந்தம் மேற்கொண் டுள்ளது. இதுதான் இஸ்ரேல் பாதுகாப்பு தொழிற்துறை வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய ஒப்பந்தம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு அதிநவீன ஏவு கணைகள் விற்பனை செய்யும் ஒப்பந்தத்தில் இஸ்ரேல் நேற்று முன்தினம் கையெழுத்திட்டது. சுமார் ரூ.10 ஆயிரத்து 500 கோடி மதிப்பில் (1.6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில்) இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் படி இஸ்ரேல் அரசுக்குச் சொந்த மான வான்வெளி தொழிற்சாலை (ஐஏஐ), இந்தியாவுக்கு அதி நவீன நடுத்தர ஏவுகணைகளை வழங்கும்.
இந்திய ராணுவத்துக்கு வழங் கப்படும் இஸ்ரேலின் நடுத்தர ஏவுகணைகள் தரையில் இருந்து விண்ணில் ஏவி எதிரி இலக்கை தாக்கி அழிக்கும் திறன் படைத் தவை. இதுகுறித்து ஐஏஐ நிறுவனம் வெளியிட்ட அறிக்கை யில், ‘‘நடுத்தர ஏவுகணைகள் மட்டுமன்றி, நீண்ட தூரம் வானில் சென்று எதிரி இலக்கை தாக்கும் ஏவுகணைகளையும் இந்திய ராணுவத்துக்கு கூடுதலாக இஸ்ரேல் வழங்கும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஏஐ நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜோசப் வெய்ஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘‘ ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள எங்கள் பங்குதாரர்களுடன் இணைந்து இந்திய ராணுவத்துக்குத் தேவையான அதிநவீன தொழில் நுட்பங்களை உருவாக்கித் தருவோம்’’ என்று கூறியுள்ளார். இஸ்ரேல் அரசின் இன்னொரு நிறுவனமான ரபேல், ரூ.2,500 கோடி மதிப்பில் இந்தியாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி இந்திய ராணுவத்துக்குத் தேவையான அதிநவீன கருவிகளை ரபேல் நிறுவனம் வழங்கும்.
இந்த ஒப்பந்தங்கள் மூலம் இந்திய ராணுவம் மேலும் பலம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.