சுவீடனில் தீவிரவாத தாக்குதல் 5 பேர் பலி; 12 பேர் படுகாயம்
சுவீடன் தலைநகர் ஸ்டாக் ஹோமில் லாரியை கடத்திய தீவிரவாதிகள் மக்கள் கூட்டத்தில் புகுந்தனர். இதில் 5 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
ஸ்டாக்ஹோமின் புறநகர்ப் பகுதியில் பிரபல வர்த்தக மையம் உள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் அந்தப் பகுதியில் நேற்று மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கு ஒரு சரக்கு லாரி பொருட்களை விநியோகம் செய்வதற்காக வந்தது.
அப்போது லாரியை வழிமறித்த மூகமூடி அணிந்த மர்ம நபர், ஓட்டுநரை கீழே தள்ளிவிட்டு, அந்த லாரியை கடத்திச் சென்றார். அதில் மேலும் 2 பேர் ஏறியுள்ளனர். வேகமாக லாரியை ஓட்டிய மர்ம நபர், நடைபாதையில் ஏறி பாதசாரிகள் மீது மோதினார். இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 12-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக சம்பவ பகுதிக்கு போலீஸார் விரைந்து வந்தனர். அப்போது லாரியில் இருந்து கீழே இறங்கிய மர்ம நபர்கள், துப்பாக்கியால் சுட்டபடி மத்திய ரயில் நிலையத்துக்குள் புகுந்து மறைந்துள்ளனர்.
சந்தேகத்தின்பேரில் 2 பேரை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் ஒருவர் அப்பகுதியில் மறைந்திருக்கக்கூடும் என்று தெரிகிறது. அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கருதி ஸ்டாக்ஹோம் மத்திய ரயில் நிலையம் மூடப்பட்டுள்ளது. அந்த ரயில் நிலையம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. நகரின் முக்கிய ரயில் நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து சுவீடன் பிரதமர் ஸ்டீபன் லோபன் கூறியபோது, ஸ்டாக்ஹோம் நகர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுதொடர்பாக 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடி கண்டனம்
சுவீடன் தாக்குதல் சம்பவத் துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரி வித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியபோது, தாக்குத லில் பலியானவர்களின் குடும்பங் களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில் சுவீடனுக்கு இந்தியா துணை நிற்கும் என்று கூறியுள்ளார்.
பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் உள்ள நாடாளுமன்ற வளாகம் அருகே கடந்த மார்ச் 22-ம் தேதி ஒரு தீவிரவாதி காரை மோதி 6 பேரை கொலை செய்தது நினைவுகூரத்தக்கது.