வர்தா புயல் உயிர்சேதம் இதனால்தான் தவிர்க்கப்பட்டது : சொல்கிறார் அமைச்சர்
அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிர்சேதம் பெருமளவு தவிர்க்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், வர்தா புயலுக்கு 24 பேர் உயிரிழந்துள்ளது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாகவும், 28 ஆயிரம் ஹெக்டேர் அளவு பயிர் சேதம் அடைந்துள்ளதாகவும் கூறினார்.
அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிர்சேதம் பெருமளவு தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், 70 ஆயிரம் குடிசைகள் முழுவதுமாகவும், பகுதியாகவும் தேசம் அடைந்துள்ளதாகவும், 529 மாடுகள், 291 ஆடுகள், 33 ஆயிரம் கோழிகள் புயலால் உயிரிழந்துள்ளதாகவும் கூறினார்.
புயல் முன்னெச்சரிக்கையாக 104 முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டது என்று கூறிய அமைச்சர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது என்றும், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது என்றும் தெரிவித்தார்.