கொரிய தீபகற்பத்தை நோக்கி கடற்படையை அனுப்பிய அமெரிக்கா
வட கொரியாவை அச்சுறுத்தும் விதமாக அமெரிக்கா தனது கடற்படையை கொரிய தீபகற்பத்தை நோக்கி அனுப்பியுள்ளது. அமெரிக்காவின் இந்தச் செயலுக்கு வட கொரியா கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
வட கொரியா அணு ஆயுத சோதனை நடத்தியது தொடர்பாக அந்நாட்டிற்கு அமெரிக்க அரசு கண்டனத்தை தெரிவித்தது. இருப்பினும் வட கொரியா, அமெரிக்க அரசின் கண்டனம் குறித்து கவலை கொள்ளாமல் தனது ராணுவ பலத்தை அதிகரிப்பதில் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வந்தது. அதிலிருந்து வட கொரியாவின் அணு ஆயுதத்தை கட்டுப்படுத்த அமெரிக்கா தொடர்ச்சியாக முயற்சித்து வருகிறது. அதன்காரணமாக தென் கொரியாவுடன் ஒரு நட்புறவைக் கடைபிடித்து வருகிறது.
இதுதொடர்பாக சமீபத்தில் சீன அதிபர் சி ஜின்பிங் (Xi Jinping) உடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் வட கொரியாவின் அணு ஆயுதத்தை கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன.
இந்நிலையில், அமெரிக்கா தனது கடற்படையை மேற்கு பசுபிக் பெருகடல் பகுதியில் கொரிய தீபகற்பத்தை நோக்கி முன்னேற்றியுள்ளது. அமெரிக்காவின் இந்த செயல் வடகொரியாவிற்கான அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் இந்தச் செயலால் அந்தப் பிராந்தியத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வட கொரியா விரைவில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகனை சோதனையை மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதனை தடுத்தும் நிறுத்தும் முயற்சியாக அமெரிக்கா கடற்படையை முன்னேற்றி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.