இறால் ஃப்ரை செய்யும்போது இதை மறந்துராதீங்க! #WeekEndRecipe
வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ… வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான இறால் ஃப்ரை அசைவ ரெசிப்பி
தேவையானவை:
இறால்(சுத்தம் செய்தது) – 200 கிராம்
இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்
வட்டமாக, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 10 கிராம்
நறுக்கிய காய்ந்த மிளகாய் – ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
எலுமிச்சை சாறு – ஒரு டீஸ்பூன்
கடுகு – கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
தேங்காய் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
ஒரு வாணலியில் இறால், இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள்தூள், உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கவும். அந்த வாணலியை அடுப்பில் வைத்து 3-5 நிமிடங்கள் வரை வேகவிடவும்.
மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கடுகு சேர்த்து வெடித்தவுடன் அதனுடன் கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்நிறமாக வதக்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், மிளகுத்தூள் சேர்த்து வதக்கி பச்சை வாசனை நீங்கியவுடன் வேகவைத்துள்ள இறால் கலவையைச் சேர்க்கவும். தண்ணீர் முழுமையாக வற்றும் வரை கொதிக்கவிட்டு, பின்னர் எலுமிச்சை சாறு, தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்த்துக் கலந்து டிரை ஆக வறுத்து, கொத்துமல்லித்தழை தூவி சூடாகப் பரிமாறவும்
இறால் ஃப்ரையை, சைடு டிஷ் மற்றும் ஸ்நாக்ஸாகச் சாப்பிடலாம்.
குறிப்பு:
இறாலை அதிக நேரம் வேகவைத்தால், அவை மிருதுவானத்தன்மையை இழப்பதுடன் சுவையும் குறையும். எனவே, இறால் ஃப்ரை செய்யும்போது மறக்காமல் இறால் அதிக நேரம் வேகாதவாறு பார்த்துக்கொள்ளவும்.