இன்னும் 2 வருடத்தில் விக்ராந்த் தமிழ் சினிமாவில் பெரிய நடிகராக வருவார்: பாலா
இன்னும் 2 வருடத்தில் விக்ராந்த் தமிழ் சினிமாவில் பெரிய நடிகராக வந்து நிற்பான் என்று இயக்குநர் பாலா புகழாரம் சூட்டினார்.
சமுத்திரக்கனி இயக்கி நடித்திருக்கும் படம் ‘தொண்டன்’. விக்ராந்த், சுனைனா, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் சமுத்திரக்கனியோடு நடித்துள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படத்துக்கு ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாலா கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்திப் பேசினார். இவ்விழாவில் பாலா பேசியதாவது:
“‘தொண்டன்’ எனது தம்பி சமுத்திரக்கனியின் படம். அவர் வீராதி வீரன் என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை. எல்லாவற்றையும் விட இந்த சினிமாத்துறையில் நல்லவர். அனைவரையும் சரி செய்துக் கொண்டு போறவர், பாசமானவர்.
அனைவருக்கு பிடித்தமானவர்கள் பட்டியிலில் எனக்கு இருக்கும் 2 பேர் பட்டியலில் முதல் ஆள் சமுத்திரக்கனி. அவரை நான் வாழ்த்திப் பேச வேண்டும் என்ற அவசியமே இல்லை. அவர் தொண்டர் தான், சினிமாவுக்குத் தொண்டர் தான். எந்ததொரு காலத்திலும் சினிமாவுக்கு தொண்டாற்றிக் கொண்டே இருப்பார்.
ஒரு படத்தின் பெயரைச் சொல்ல விரும்பவில்லை. ஒரு தவறான கதாபாத்திரம் செய்திருந்தார். அப்போது அவரிடம் ‘உன் மீது நான் நிறைய மரியாதை வைத்திருக்கிறேன். இது மாதிரியான கதாபாத்திரங்கள் செய்யாதே’ என்றேன். ‘இனிமேல் செய்ய மாட்டேன்’ என்று பதிலளித்தார்.
கஞ்சா கருப்பு தேவையில்லாமல் படம் தயாரித்து இருந்த காசை எல்லாம் விட்டுவிட்டார். உனக்கெல்லாம் தயாரிப்பைப் பற்றி என்ன தெரியும்? இப்போது இப்படத்தில் கிடைக்கும் பணத்தை வைத்து பிழைத்துக் கொள். அதைத் தான் உனக்கு சொல்ல முடியும்.
இதில் நடித்திருக்கும் அர்த்தனா, சுனைனா ரெண்டு பேரும் தமிழ் பேச முயற்சி செய்கிறார்கள். நன்றாக வருவார்கள். விக்ராந்த் இப்படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேடையில் ஒவ்வொருவர் பேசும் போதும் அவர்களையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கண்ணில் ஒரு வெறி தெரியுது.
அவரை முதலில் பார்க்கும் போது ‘வாப்பா சேது உக்காரு’ என்று தான் சொன்னேன். அப்போது ‘நான் சேது இல்ல சார். விக்ராந்த்’ என்று சொன்னார். சுசீந்திரன் இயக்கத்தில் நடித்த படத்தில் சேது என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் தான் இப்போதும் என் மனதில் நிற்கிறது. அதான் அந்தப் பெயர் அப்போது ஞாபகத்தில் வந்தது.
இந்தப் பையனும் பெரிய ஆளாக வந்திருக்க வேண்டும். கொஞ்சம் தாமதமாகிவிட்டது. இப்போதும் ஒன்றும் மோசமில்லை. வயது குறைவு தான். இன்னும் 2 வருடத்தில் இந்தப் பையன் தமிழ் சினிமாவில் பெரிய நடிகராக வந்து நிற்பார். நான் செய்யவில்லை என்றாலும், வேறு யார் செய்யவில்லை என்றாலும் அது தானாக வந்து அமையும்.
சில வாய்ப்புகள் திறமைசாலிகளைத் தேடி தானாக வரும். விக்ராந்த் அப்படிப்பட்ட திறமைசாலி. கண்டிப்பாக அவருக்கு வாய்ப்புகள் தேடி வரும். என்னுடைய வாழ்த்துகள்” என்று பேசினார் பாலா.