Breaking News
மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த துணை மருத்துவப் பட்டப்படிப்புகள்!

+2க்குப் பிறகு…

நவீன விஞ்ஞான மருத்துவம் (Modern Scientific Medicine) மற்றும் ஆய்வறிவு மருத்துவம் (Evidence Based Medicine) என்று அழைக்கப்படும் ஆங்கில வழி மருத்துவமே (Allopathy) உலகில் அதிக பயன்பாட்டில் இருந்துவருகிறது. உலக மக்கள்தொகையில் ஆங்கில மருத்துவ முறையிலான மருத்துவர்களின் எண்ணிக்கை சராசரியாக 1.5:1000 எனும் அளவில் இருக்கிறது.

இந்திய மக்கள்தொகையில் ஆங்கில மருத்துவர்களின் எண்ணிக்கை 1:1700 எனும் விகிதத்தில் இருந்துகொண்டிருக்கிறது. இந்த விகிதத்தை 2031 ஆம் ஆண்டுக்குள் 1:1000 எனும் அளவில் கொண்டுவந்துவிட வேண்டும் என்கிற நோக்கத்துடன் இந்திய மருத்துவக்குழு (Medical Council of India) பல்வேறு புதிய நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இதனடிப்படையில், பல ஆண்டுகளாகச் செயல்பட்டுவரும் மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் இளநிலை மருத்துவப் பட்டப்படிப்புக்கான (எம்.பி.பி.எஸ்) இடங்களின் எண்ணிக்கை அதிகரித்தும், ஆங்கில வழி மருத்துவக் கல்லூரிகள் தொடக்கத்திற்கான கடுமையான விதிமுறைகளில் சில தளர்த்தப்பட்டுப் பல புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கான அனுமதியினை வழங்கியும் இளநிலை மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான இடங்களை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இருப்பினும், இந்தியாவில் இளநிலை ஆங்கிலவழி மருத்துவப் பட்டப்படிப்புக்கான (M.B.B.S) இடங்களின் எண்ணிக்கை இன்னும் குறைவாகத்தான் இருக்கிறது.

ஆங்கிலவழி மருத்துவப் படிப்புகள்: தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புகளுக்காகத் தொடங்கப்பட்ட, தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின்கீழ் இளநிலை ஆங்கில மருத்துவப் படிப்பில் (M.B.B.S) 21 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2600 இடங்கள், 16 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 2110 இடங்கள் என்று மொத்தம் 37 கல்லூரிகளில் 4710 இடங்கள் இருக்கின்றன. இளநிலைப் பல் மருத்துவப் பட்டப்படிப்பில்(B.D.S) ஓர் அரசுக் கல்லூரியில் 100 இடங்கள், சுயநிதிக் கல்லூரிகளில் 1710 இடங்கள் என்று மொத்தம் 1810 இடங்கள் இருக்கின்றன.

தேசியத் தகுதித் தேர்வு: ஆங்கில மருத்துவப் பட்டப்படிப்பு (M.B.B.S), பல் மருத்துவப் பட்டப்படிப்பு (B.D.S) ஆகியவற்றில் ஏதாவதொன்றில் இடம்பிடிக்க +2 தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்றிடப் போராடிக்கொண்டிருந்த மாணவர்கள், தற்போது தேசியத் தகுதி மற்றும் நுழைவுத்தேர்வினை (National Eligibility and Entrance Test) எழுதி, அதிலும் அதிக மதிப்பெண்களைப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் முதன்மை பெற்றவர்களுக்கு மத்திய/மாநில அரசுகளின் இட ஒதுக்கீட்டு நடைமுறையைப் பின்பற்றி மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும்.

இரு படிப்புகளிலும் இடம் கிடைக்காத மருத்துவப் படிப்பில் ஆர்வமுடைய மாணவர்கள், ஆங்கில மருத்துவப் பட்டப்படிப்பு (எம்.பி.பி.எஸ்) தவிர்த்த, பிற வழிகளிலான மருத்துவப் பட்டப்படிப்புகளிலோ அல்லது மருத்துவம் சார்ந்த அறிவியல் (Allied Medical Science) பட்டப்படிப்புகளிலோ சேர்ந்து மருத்துவச் சேவையாற்ற முடியும்.

பிற மருத்துவப் பட்டப்படிப்புகள்: ஆங்கில வழி மருத்துவம் (M.B.B.S மற்றும் பல் மருத்துவம் (B.D.S) ஆகிய இரு இளநிலை மருத்துவப் பட்டப்படிப்புகளைத் தவிர்த்து, ஆயுர்வேதம், ஓமியோபதி, இயற்கை மற்றும் யோகா அறிவியல், சித்தா, யுனானி எனும் ஐந்து வழிகளிலான மருத்துவப் பட்டப்படிப்புகளைப் படித்தும் மருத்துவராகப் பணியாற்ற முடியும். தமிழ்நாட்டில் ஆயுர்வேத மருத்துவப் பட்டப்படிப்பிற்கு (Bachelor of Ayurvedic Medicine and Surgery – B.A.M.S) அரசு கல்லூரி ஒன்று (60 இடங்கள்), சுயநிதிக் கல்லூரிகள் ஐந்து (230 இடங்கள்) என்று மொத்தம் ஆறு கல்லூரிகளில் 290 இடங்களும்,

ஓமியோபதி மருத்துவப் பட்டப்படிப்பிற்கு (Bachelor of Homoeopathic Medicine and Surgery – B.H.M.S) அரசுக் கல்லூரி ஒன்று (50 இடங்கள்), சுயநிதிக் கல்லூரிகள் ஒன்பது (560 இடங்கள்) என்று மொத்தம் பத்துக் கல்லூரிகளில் 610 இடங்களும், இயற்கை மற்றும் யோகா அறிவியல் மருத்துவப் பட்டப்படிப்பிற்கு (Bachelor of Naturopathy and Yogic Sciences – B.N.Y.S) அரசுக் கல்லூரி ஒன்று (60 இடங்கள்), சுயநிதிக் கல்லூரிகள் மூன்று (240 இடங்கள்) என்று மொத்தம் நான்கு கல்லூரிகளில் 300 இடங்களும், சித்தா மருத்துவப் பட்டப்படிப்பிற்கு (Bachelor of Siddha Medicine and Surgery- B.S.M.S) அரசுக் கல்லூரிகள் இரண்டு (160 இடங்கள்), சுயநிதிக் கல்லூரிகள் ஆறு (310 இடங்கள்) என்று மொத்தம் எட்டுக் கல்லூரி களில் 470 இடங்களும், யுனானி வழி மருத்துவப் பட்டப்படிப்பிற்கு (Bachelor of Unani Medicine and Surgery B.U.M.S) அரசுக் கல்லூரி ஒன்றில் 60 இடங்களும் என்று ஐந்து வகையான மருத்துவப் பட்டப்படிப்புகளில் மொத்தம் 1730 இடங்கள் வரை இருக்கின்றன.

மருத்துவம் சார்ந்த அறிவியல் பட்டப்படிப்புகள்: இதுபோல் மருத்துவம் சார்ந்த இளநிலை அறிவியல் படிப்புகளாகச் செவிலியர் பட்டப்படிப்புகள் (B.Sc.-Nursing) 5 அரசுக் கல்லூரிகள், 158 சுயநிதிக் கல்லூரிகள் மற்றும் 6 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும், மேம்பட்ட அடிப்படைச் செவிலியர் பட்டப்படிப்புகள் (Post Basic B.Sc – Nursing) 2 அரசுக் கல்லூரிகள் மற்றும் 66 சுயநிதிக் கல்லூரிகளிலும், மருந்தாளுமைப் பட்டப்படிப்புகள் 2 அரசுக் கல்லூரிகள், 38 சுயநிதிக் கல்லூரிகள் மற்றும் 4 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும், இயன்முறை மருத்துவப் பட்டப்படிப்புகள் (Bachelor of Physiotherapy – B.P.T) 2 அரசுக் கல்லூரிகள், 29 சுயநிதிக் கல்லூரிகள் மற்றும் 4 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும், தொழில்வழி மருத்துவப் பட்டப்படிப்புகள் (B.O.T) 2 சுயநிதிக் கல்லூரிகள் மற்றும் 3 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் இடம்பெற்றிருக்கின்றன. இந்த மருத்துவத் தொழில் முறைப் படிப்புகளில் 10,000 இடங்கள் வரை இருக்கின்றன.

இளநிலை அறிவியல் படிப்புகள்: பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் பல்வேறு தலைப்புகளில் இளநிலை அறிவியல் பட்டப்படிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. அவை: Accident & Emergency Care Technology, Audiology & speech Language Pathology, Cardiac Technology, Cardio Pulmonary Perfusion Care Technology, Critical Care Technology, Dialysis Technology, Neuro Electrophysiology, Medical Laboratory Technology, Medical Sociology, Nuclear Medicine Technology, Operation Theatre & Anaesthesia Technology, Optometry, Physician Assistant, Prosthetics&Orthotics, Radiology Imaging Technology, Radiotherapy Technology, Medical Record Science, Respiratory Therapy. இந்தப் பாடப்பிரிவுகளிலும் 5,000 இடங்கள் வரை இருக்கின்றன.

மருத்துவப் பதிவேட்டு அறிவியல் பட்டப்படிப்பு (Bachelor of Medical Record Science – B.M.R.Sc.) ஒரு கல்லூரியிலும், மருத்துவப் பரிசோதனைத் தொழில்நுட்பப் பட்டப்படிப்பு (Bachelor of Science in Medical Laboratory Technology – B.Sc.(MLT)) ஒரு கல்லூரியிலும், பார்வை அளவையியல் பட்டப்படிப்பு (Bachelor of Science in Optometry – B.Sc.(Optometry)) ஒரு கல்லூரியிலும் இடம்பெற்றிருக்கின்றன. இவற்றில் 100 இடங்கள் வரை இருக்கின்றன. இதுபோல் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மருத்துவம் தொடர்பான பட்டயப்படிப்புகளும், Dental Hygienist, Dental Mechanics, Dental Operating Room Assistant போன்ற பல் மருத்துவம் தொடர்புடைய சில படிப்புகளும்கூட இருக்கின்றன.

ஆங்கில மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் பட்டப்படிப்புகளில் இடம் கிடைக்காதவர்கள், மேற்காணும் பிற வழிமுறைகளிலான மருத்துவப் படிப்புகள், மருத்துவம் சார்ந்த உடல்நல அறிவியல் படிப்புகளில் தங்களுக்கு ஏற்ற படிப்பாக ஒன்றினைத் தேர்வு செய்து, படித்து முடித்து உடனடியாக வேலைவாய்ப்பைப் பெறமுடியும்.

+2 தேர்வு எழுதி முடித்ததும் தேர்வு முடிவுக்காகக் காத்திருக்கும்போதே மேற்காணும் மருத்துவம் சார்ந்த தொழில்முறைப் படிப்புகள், இளநிலை அறிவியல் பட்டப்படிப்புகள் எந்தக் கல்லூரிகளில் இடம்பெற்றிருக்கின்றன?

மாணவர் சேர்க்கை நடைமுறைகள் என்ன? என்பன போன்ற மேலும் கூடுதல் தகவல்களை அறிந்துகொள்ளத் தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் https://www.tnmgrmu.ac.in எனும் இணையதள முகவரிக்குச் செல்லலாம் அல்லது அருகிலுள்ள அரசு அல்லது சுயநிதி மருத்துவக் கல்லூரி ஒன்றிற்கு நேரில் சென்று தகவல்களைப் பெறலாம்.

நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவப் படிப்புகள்

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகம், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் உள்ளிட்ட பத்து நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் ஆங்கில மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான இடங்கள் இருக்கின்றன.

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் இருக்கும் மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான இடங்களில் சேர்க்கை பெறுவதற்கும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத்தேர்வில் (National Eligibility and Entrance Test) தகுதிக்குரிய மதிப்பெண்கள் எடுக்கவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.

இதன் மூலம், தகுதியுடையவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்புகளில் இடம்பெற முடியும் எனும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான கட்டணம் குறிப்பிடத்தக்க அளவு குறையும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்று கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் செவிலியர், மேம்பட்ட அடிப்படைச் செவிலியர், இயன்முறை மருத்துவம், தொழில்வழி மருத்துவம், மருந்தாளுமை உள்ளிட்ட இளநிலை அறிவியல் பட்டப்படிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. இதுபோல் பல்வேறு தலைப்புகளிலான மருத்துவம் சார்ந்த இளநிலை அறிவியல் பட்டப்படிப்புகளும், பட்டயப்படிப்புகளும், பல்வேறு சான்றிதழ் படிப்புகளும் இடம்பெற்றிருக்கின்றன. இப்படிப்புகளில் ஒன்றைத் தேர்வு செய்து மருத்துவத்துறையில் உடனடி வேலைவாய்ப்பைப் பெறமுடியும்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.