சரியாகப் படிக்கவில்லை என்று கூறி யூகேஜி மாணவனின் மாற்றுச் சான்றிதழை வாங்கச் சொன்ன பெங்களூரு பள்ளி
மற்ற சிறுவர்களுடன் சேர்ந்து படிக்கும் திறமை இல்லை என்று கூறி யூகேஜி மாணவரின் மாற்றுச் சான்றிதழை வாங்கிக் கொள்ளுமாறு பெற்றோரிடம் அறிவுறுத்தி இருக்கிறது பெங்களூரைச் சேர்ந்த ஒரு பள்ளி.
இது குறித்து தி இந்துவிடம் (ஆங்கிலம்) பேசிய மாணவரின் தாய், ”என்னுடைய மகன் மற்ற மாணவர்களுடன் ஒத்துழைக்க மறுக்கிறான் என்று பள்ளியில் கூறுகின்றனர். அவன் உடல்நிலை சரியில்லாத நிலையில், நிறைய நாட்கள் வகுப்புகளைத் தவற விட்டுவிட்டான். ஆனாலும் சி+ பெற்றுள்ளான். இதைப் பள்ளி நிர்வாகம் குறைவு என்கிறது.
பள்ளி நிர்வாகத்தினருடன் இது குறித்துப் பேசினேன். பிரச்சினையை சரிசெய்ய மாணவர் மறுதேர்வு எழுத வேண்டும் என்று கூறினர். என் மகன் தேர்வை முறையாக எழுதவில்லை எனில், மாற்றுச் சான்றிதழ் (டி.சி) கொடுத்துவிடுவோம் என்று கூறினர்” என்கிறார்.
இதுதொடர்பாக கல்வி ஆர்வலர்களிடம் பேசியபோது, ”இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின்படி, ‘குழந்தைகளுக்கு கல்வி கற்க முழு உரிமை உண்டு. எந்தக் குழந்தையும் உடல் ரீதியான தண்டனைக்கோ, மன துன்புறுத்தலுக்கோ ஆளாகக் கூடாது’. இதன்மூலம் அவர்களின் சட்ட மீறல் செய்தது உறுதியாகியுள்ளது” என்றனர்.
பெங்களூரு வட சரக வட்டாரக் கல்வி அலுவலர் கோவிந்தே கவுடா இதுகுறித்துப் பேசும்போது, ”பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர் அதே பள்ளியில் தொடர்வார் என்று உறுதி கூறுகிறோம்” என்றார்.
இதுதொடர்பாக பல முறை முயற்சித்தும், பள்ளி நிர்வாகம் பதிலளிக்க மறுத்துவிட்டது.