சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன்: 2-வது சுற்றில் பி.வி.சிந்து
சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டனில் இந்தியாவின் பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்து, சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் ஆல் இங்கிலாந்து சாம்பியனான ஜப்பானின் ஒஹூ ராவை எதிர்த்து விளையாடினார். இதில் சிந்து முதல் செட்டை 10-21 என இழந்தார்.
எனினும் அடுத்த இரு செட் களையும் தனது ஆக்ரோஷமான ஆட்டத்தால் 21-15, 22-20 என கைப்பற்றினார். சுமார் ஒரு மணி நேரம் 2 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 10-21, 21-15, 22-20 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
சிந்து தனது 2-வது சுற்றில் இந்தோனேஷியாவின் பிட்ரியானியை எதிர்த்து விளையாடுகிறார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் ரிதுஅபர்னா 18-21, 13-21 என்ற நேர் செட்டில் சீன தைபேவின் சூ யா ஷிங்கிடம் தோல்வியடைந்தார். இந்த ஆட்டம் 58 நிமிடங்களில் முடிவடைந்தது.
ஆடவர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஷாய் பிரணீத் 17-21, 21-7, 21-19 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் எமில் ஹால்ஸ்டை வீழ்த்தினார். 2-வது சுற்றில் ஷாய் பிரணீத், சீனாவின் குயோ பினை எதிர்கொள்கிறார்.
மற்ற இந்திய வீரர்களான சவுரப் வர்மா 15-21, 14-21 என்ற நேர் செட்டில் இந்தோனேஷியாவின் அந்தோனி சினிசுகாவிடமும், ஷமீர் வர்மா 26-28, 21-23 என்ற செட் கணக்கில் போராடி ஹாங் காங்கின் ஹூ யுனிடம் தோல்வியடைந்தனர்.
மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா, சிக்கி ரெட்டி ஜோடி 21-19, 21-19 என்ற நேர் செட்டில் மலேசியாவின் யின் லோ லிம், யப் ஹெங் வென் ஜோடியை வீழ்த்தியது.
கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாட்விட் சாய் ராஜ், மனீஷா ஜோடி 13-21, 21-16, 11-21 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் லு ஷிங் யா, ஹை ஷின் ஜோடியிடம் வீழ்ந்தது. ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மனு அட்ரி, சுமித் ரெட்டி ஜோடி 8-21, 16-21 என்ற நேர் செட்டில் ஜப்பானின் தக்கேஷி கமுரா, கெய்கோ சோனோடா ஜோடியிடம் தோல்வி கண்டது.