நாடு முழுவதும் நடந்த சோதனையில் ரூ.86 கோடி புதிய ரூபாய் நோட்டுகள் உள்பட ரூ.428 கோடி பறிமுதல் !
பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பின்னர் நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.428 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் 8-ம் தேதி நள்ளிரவுக்கு பின்னர் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அவற்றை வங்கி, தபால் நிலையங்களில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து பொது மக்கள் தங்களிடம் உள்ள நோட்டுகளை மாற்றி வந்தனர்.
இதனிடையே புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது. இதையடுத்து நாடு முழுவதும் வருமான வரித்துறை அதிரடி சோதனையில் ஈடுபட்டது. கருப்பு பணம் பதுக்கியவர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
அதன்படி நவம்பர் 8-ம் தேதிக்கு பிறகு நடந்த சோதனையில் ரூ.428 கோடி பறிமுதல் செய்யப்பட்டது என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. 677 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. டிசம்பர் 19 வரையில் தாமாக முன்வந்து ரூ.3,185 கோடி பணத்திற்கு கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ரூ.428 கோடி பணத்தில் 86 கோடி ரூபாய் புதிய நோட்டுகளாகும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.