ஜக்கி வாசுதேவ், ஜேசுதாஸ், சோ உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள்: குடியரசுத் தலைவர் வழங்கினார்
ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ், பின்னணி பாடகர் ஜேசுதாஸ், மறைந்த மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி உள்ளிட்டோருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று பத்ம விருதுகளை வழங்கினார்.
குடியரசு தினத்தையொட்டி கடந்த ஜனவரி 25-ம் தேதி பத்ம விருதுப் பட்டியல் வெளியிடப் பட்டது. இதில் 7 பேருக்கு பத்ம விபூஷண், 7 பேருக்கு பத்ம பூஷண், 75 பேருக்கு பத்மஸ்ரீ என மொத்தம் 89 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் முதல்கட்டமாக கிரிக்கெட் வீரர் விராட் கோலி உள்ளிட்டோருக்கு கடந்த மார்ச் 30-ம் தேதி பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. மீதமுள்ளோருக்கு டெல்லியில் நேற்று நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பத்ம விருதுகளை வழங்கினார்.
ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ், திரைப்பட பின்னணி பாடகர் ஜேசுதாஸுக்கு பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டன. மறைந்த மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமிக்காக அவரது மனைவி சவுந்தரா பத்ம பூஷண் விருதினைப் பெற்றுக் கொண்டார்.
மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன், ஒலிம்பிக் மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற சாக்்ஷி மாலிக், ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் கில் 4-வது இடம் பிடித்த திமா கர்மாகர் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன.
மொத்தம் 44 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படும் என்று குடியரசுத் தலைவர் மாளிகை அறிவித்திருந்தது. இதில் 40 பேர் நேற்று நேரில் விருதினைப் பெற்றுக் கொண்டனர். மறைந்த 3 பேர் தரப்பில் அவர்களது உறவினர்கள் விருதினைப் பெற்றுக் கொண்டனர். ஒருவர் விழாவில் பங்கேற்கவில்லை.
விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.