இடைத்தேர்தலில் 5 இடங்களை கைப்பற்றியது பாஜக
ஸ்ரீநகரில் நேற்று மறுவாக்குப்பதிவு நடைபெற்ற ஒரு வாக்குச்சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர். | படம்: ராய்ட்டர்ஸ்
8 மாநிலங்களில் 10 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
காங்கிரஸ் 3 தொகுதிகளிலும், திரிணமூல் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகியவை தலா 1 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன.
கர்நாடகா, மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 2 தொகுதிகளிலும் டெல்லி, இமாச்சலபிரதேசம், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மேற்குவங்கம், அசாம் ஆகிய 6 மாநிலங்களில் தலா ஒரு தொகுதியிலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 5 தொகுதி களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
டெல்லியில் ரஜவ்ரி கார்டன் தொகுதிக்கான இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் மஞ்சிந்தர் சிங் சிர்சா வெற்றி பெற்றார். இவர் காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சியை விட 14,652 வாக்குகள் கூடுதலாக பெற்றார். இங்கு ஆளும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ஹர்ஜீத் சிங் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டார். இவர் வெறும் 10,240 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் தொகை இழந்தார். பதிவான வாக்குகளில் ஆம் ஆத்மி கட்சி 6-ல் 1 பங்குக்கும் குறைவாக பெற்று மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. அக்கட்சி வசமிருந்த இத்தொகுதி பாஜக வசம் சென்றுள்ளது. இதனால் டெல்லி சட்டப்பேரவையில் பாஜகவின் பலம் 4 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லியில் மாநகராட்சி தேர்த லுக்கு முன்னதாக பாஜகவுக்கு கிடைத்த இந்த வெற்றி, அக்கட்சி யினருக்கு உற்சாகம் அளித் துள்ளது.
ம.பி.யில் பந்தவ்கார், அடேர் ஆகிய 2 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பந்தவ்கார் தொகுதியில் ஆளும் பாஜக வேட்பாளர் சிவநாராயண் சிங் வெற்றி பெற்றார். இவர் காங்கிரஸ் வேட்பாளரை 25,476 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஆனால் அடேர் தொகுதியில் பாஜக வேட்பாளர் அர்விந்த் படோரியா தோல்வி அடைந்தார். இங்கு காங்கிரஸ் வேட்பாளர் ஹேமந்த் கடாரே 858 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இமாச்சலபிரதேசத்தில் போரஞ்ச் (தனி) தொகுதிக்கான தேர்தலில் பாஜக வேட்பாளர் அனில் திமான் வெற்றி பெற்றார். இவர் ஆளும் காங்கிரஸ் வேட் பாளரை விட 8,290 வாக்குகள் கூடுதலாக பெற்றார். இதன் மூலம் பாஜக இத்தொகுதியை தக்க வைத்துக்கொண்டது. 68 உறுப்பினர் களை கொண்ட பேரவையில் பாஜகவின் பலம் மீண்டும் 28 ஆக உயர்ந்துள்ளது.
அசாமில் தேமாஜி தொகுதிக்கான இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் ரானோஜ் பெகு வெற்றி பெற்றார். இவர் காங்கிரஸ் வேட்பாளரை 9,285 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
ராஜஸ்தானில் டோல்பூர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் ஆளும் பாஜக வேட்பாளர் ஷோபா ராணி வெற்றி பெற்றார். இவர் காங்கிரஸ் வேட்பாளரை விட 38,673 வாக்குகள் கூடுதலாக பெற்றார்.
கர்நாடகாவில் நஞ்சன்கூடு, குண்டலுபேட்டை ஆகிய தொகுதி களுக்கு இடைத்தேர்தல் நடை பெற்றது. இவ்விரு தொகுதிகளை யும் ஆளும் காங்கிரஸ் தக்க வைத்துக்கொண்டது. குண்டலு பேட்டையில் கீதா 10,877 வாக்குகள் வித்தியாசத்திலும் நஞ்சன்கூடு தொகுதியில் கேசவ மூர்த்தி 21,334 வாக்குகள் வித்தியாசத்திலும் பாஜக வேட்பாளர்களை தோற்கடித்தனர்.
ஜார்க்கண்டில் லிட்டில் பாரா தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளர் சைமன் மராண்டி வெற்றி பெற்றார். இவர் ஆளும் பாஜக வேட்பாளரை 12,900 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
மேற்குவங்கத்தில் கன்தி தக்்ஷின் தொகுதிக்கான இடைத் தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் சந்திரிமா பட்டாச்சார்யா வெற்றி பெற்றார். இவர் பாஜக வேட்பாளரை 42,526 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இத்துடன் 10 சட்டப்பேரவை தொகுதிகளுடன் ஸ்ரீநகர் மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் வன்முறை காரணமாக 35 வாக்குச் சாவடிகளில் நேற்று மறுதேர்தல் நடைபெற்றது.