அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி 6-வது அணுஆயுத சோதனைக்கு தயாராகி வருகிறது வடகொரியா
அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி 6-வது அணுஆயுத சோதனையை நடத்த வடகொரியா தயாராகி வருகிறது.
கடந்த 2006 அக்டோபரில் வடகொரியா தனது முதல் அணு ஆயுத சோதனையை நடத்தியது. இதைத்தொடர்ந்து 2009, 2013-ல் அடுத்தடுத்து அணுஆயுத சோதனைகள் நடத்தப்பட்டன. கடந்த 2016 ஜனவரி, 2016 செப்டம்பரில் அதிக சக்திவாய்ந்த அணுஆயுதங்கள் சோதனை செய்யப்பட்டன.
அந்த வரிசையில் 6-வது முறையாக அணுஆயுத சோதனை நடத்த வடகொரியா தயாராகி வருகிறது. அந்த நாட்டின் புங்கி-ரி பகுதியில் அணுகுண்டு சோதனைக்கான முன்னேற் பாடுகள் செய்யப்பட்டு வரு கின்றன என்று அமெரிக்காவைச் சேர்ந்த ‘38 நார்த்’ தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தத் தகவல் செயற்கைக் கோள் புகைப்படங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன. வடகொரியாவில் பணியாற்றும் வெளிநாட்டு நிருபர்களும் அணுஆயுத சோதனை தகவல் உண்மை என்று தெரிவித்துள்ளனர்.
வடகொரியாவை மிரட்டும் வகையில் அமெரிக்க கடற் படையைச் சேர்ந்த யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன் போர்க்கப்பல் மற்றும் ஏராளமான சிறிய ரக போர்க்கப்பல்கள் கொரிய தீப கற்பத்தில் குவிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த அச்சுறுத்தல்களை மீறி அணுஆயுத சோதனைக்கு வடகொரியா தயாராகி வருகிறது.
சீனா சமரச முயற்சி
இந்த விவகாரத்தில் பதற் றத்தை தணிக்க சீன அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. எனினும் கொரிய தீபகற்பத்தில் அமெரிக்க படைகள் குவிக்கப்படுவதற்கு சீனா கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.