ஆப்கனில் ஐ.எஸ். முகாம் மீது அமெரிக்கா ‘ராட்சத’ குண்டு வீச்சு
ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் உள்ள பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் முகாம் அமைந்திருந்த இடத்தைக் குறிவைத்து ராட்சத வெடிகுண்டை வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் 36 பேர் பலியாகினர்.
இது தொடர்பாக அமெரிக்க ராணுவம், “ஜிபியு-43 (GBU-43) ரக வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அணுசக்தி அல்லாத மிகப்பெரிய வெடிகுண்டு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய ராட்சத வெடிகுண்டை அமெரிக்கா பயன்படுத்துவது இது முதன்முறையாகும். பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள நங்க்ரஹார் மாகாணத்துக்கு அருகே உள்ள அச்சின் மாவட்டத்தைக் குறிவைத்து எம்.சி.-130 ரக விமானம் மூலம் இந்த வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது.
இந்த வெடிகுண்டை, அமெரிக்காவின் வசம் உள்ள வெடிகுண்டுகளுக்கு எல்லாம் தாய் என்றழைக்கிறது பென்டகன் (அமெரிக்கா ராணுவத் தலைமையகம்). இதன் எடை 9,797 கிலோ. இதில் ஜிபிஎஸ் கருவி இணைக்கப்பட்டுள்ளது. முதன்முதலில் இந்த வெடிகுண்டு இராக் போருக்கு முன்னதாக கடந்த 2003-ம் ஆண்டுதான் சோதிக்கப்பட்டது.
இந்த வெடிகுண்டு ஏற்படுத்திய சேத விவரம் இன்னும் தெரியவரவில்லை.
தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் சீன் ஸ்பைசர் கூறும்போது, “ஐ.எஸ்., பயங்கரவாதிகள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு எளிதில் சென்றுவர பயன்படுத்தும் குகைப்பாதைகள், சுரங்கப்பாதைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. அதேவேளையில், பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டன” என்றார்.
ஆப்கானிஸ்தான் தற்போது நடைபெற்றுவரும் ஆட்சி அமெரிக்காவின் ஆதரவு பெற்றது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானை தங்கள் கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்துவருகிறது தாலிபன் படைகள். அதேவேளையில் ஐ.எஸ். பயங்கரவாத கும்பலும் ஆப்கனை கட்டுக்குள் கொண்டுவர முயல்கிறது. ஐ.எஸ்.-க்கு எதிராக தாலிபன்களும் தாக்குதல் நடத்திவரும் நிலையில் அமெரிக்கா ஐ.எஸ். படைகளின் பதுங்கிடம் மீது ராட்சத் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிக்க ட்ரம்ப் நிர்வாகம் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.