ரவீந்திர ஜடேஜா வருகையால் முதல் வெற்றியை ருசிக்கும் முனைப்பில் குஜராத்
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு ராஜ் கோட்டில் நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் லயன்ஸ் – ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிகள் மோதுகின்றன. குஜராத் அணியில் ரவீந்திர ஜடேஜா களமிறங்குவது அந்த அணி யின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என கருதப் படுகிறது.
குஜராத் அணி கடந்த சீசனில் அறிமுக தொடரிலேயே 3-வது இடம் பிடித்து அசத்தியது. ஆனால் தற்போதைய சீசனை அந்த அணி சிறப் பாக தொடங்கவில்லை. மோதிய 2 ஆட்டங் களிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இருமுறை சாம்பியனான கொல்கத்தா மற்றும் நடப்பு சாம்பியனான ஹைதராபாத் ஆகிய அணிகளிடம் குஜராத் தோல்வி கண்டுள்ளது.
இந்நிலையில் புனே அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா களமிறங்க உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய போது ஜடேஜாவுக்கு விரல் பகுதியில் லேசான வலி இருந்ததால் பிசிசிஐ மருத்துவக்குழு அவரை ஒருவார காலம் ஓய்வில் இருக்க ஆலோசனை வழங்கியிருந்தது.
இதனால் குஜராத் அணி விளையாடிய முதல் இரு ஆட்டங்களிலும் அவர் கலந்துகொள்ள வில்லை. ஜடேஜா உள்நாட்டு சீசனில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அபார திறமையை வெளிப்படுத்தியிருந்தார். இதனால் அவரது வருகை குஜராத் அணியின் பலத்தை அதிகரிக்கும் என கருதப்படுகிறது. மற்றொரு முன்னணி வீரரான டுவைன் பிராவோவும் காயத்தில் இருந்து முற்றிலும் குணமடையும் நிலையில் உள்ளார். நேற்று அவர் அணியினருடன் பயிற்சியில் கலந்து கொண்டார். இதனால் அவரும் விரைவில் களமிறங்குவார் என தெரிகிறது.
குஜராத் அணி பேட்டிங்கில் வலுவாகவே திகழ்கிறது. பிரண்டன் மெக்கலம், ஆரோன் பின்ச், ஜேசன் ராய், சுரேஷ் ரெய்னா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் அதிரடி வீரர்களாக உள்ள னர். இவர்களில் மெக்கலம், ஆரோன் பின்ச் ஆகி யோர் முதல் இரு ஆட்டங்களிலும் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய அளவில் ரன்கள் சேர்க்கவில்லை.
ஜேசன் ராய் சிறப்பான தொடக்கம் கொடுத்த போதிலும் அதனை பெரிய அளவி லான ஸ்கோரை குவிக்கும் அளவுக்கு அடுத்த கட்டத்துக்கு செல்லவில்லை. மிடில் ஆர்டரில் ரெய்னா, தினேஷ் கார்த்திக் பலம் சேர்க்கிறார்கள். இரு ஆட்டத்திலும் அவர்கள் சிறந்த பங்களிப்பை வழங்கினர். மேற்கிந்தியத் தீவுகளை சேர்ந்த டுவைன் ஸ்மித் தனது அதிரடியால் எந்த நேரத்திலும் ஆட்டத்தின் போக்கை மாற்றக் கூடியவராக உள்ளார். குஜராத் அணியின் பிரச்சினையே பலவீனமாக பந்து வீச்சுதான். கடந்த இரு ஆட்டத்தையும் சேர்த்து குஜராத் பந்து வீச்சாளர்கள் ஒரே ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்றி உள்ளனர். கடந்த சீசனில் சிறப் பாக செயல்பட்ட தவல் குல்கர்னி மற்றும் பிரவீன் குமார், பாசில் தம்பி, தேஜாஸ் பரோகா ஷிவில் கவுசிக் உள்ளிட்ட அனைத்து பந்து வீச்சாளர்களும் கடந்த ஆட்டத்திலும் மிக சாதார ணமாகவே செயல்பட்டனர். இன்றைய ஆட்டத்தில் ஜடேஜா மற்றும் அனுபவ வீரரான முனாப் படேல் ஆகியோர் கள மிறங்க உள்ளதால் பந்து வீச்சு பலம் பெறக்கூடும்.
புனே அணி இந்த சீசனை வெற்றி யுடன் தொடங்கிய நிலையில் அடுத்த டுத்து இரு தோல்விகளை சந்தித் துள்ளது. கடந்த ஆட்டத்தில் களமிறங்காத ஸ்டீவ் ஸ்மித், மனோஜ் திவாரி இன்று களமிறங்குகின்றனர். இதனால் அணியின் பேட்டிங் கூடுதல் வலுவடையும்.
ரூ.14.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் பெரிய அளவிலான ரன்குவிப்பை நிகழ்த்தாவிட்டாலும் தனது அதிரடியால் பலம் சேர்க்கிறார். தோனியின் மோசமான பார்ம் அணிக்கு சற்று பின்னடைவாக உள்ளது.
கேப்டனாக இல்லாமல் சாதாரண வீரராக இந்த சீசனில் விளையாடி வரும் அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இன்றைய ஆட்டத்தில் தனது அதிரடி பேட்டிங்கால் பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப் படுகிறது.
பந்து வீச்சில் இம்ரன் தகரின் சுழல் பலமாக உள்ளது. வேகப் பந்து வீச்சில் அசோக் திண்டா, தீபக் ஷகர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தங்களது திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர்.