தேசிய விருது குழுவை மீண்டும் சாடிய ஏ.ஆர்.முருகதாஸ்
64வது தேசிய விருது குழுவை மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் சாடியுள்ளார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.
சமீபத்தில் 64-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் அறிவிக்கப்பட்டது. தமிழில் ராஜூமுருகன் இயக்கத்தில் வெளியான ‘ஜோக்கர்’ சிறந்த தமிழ் படத்திற்கான விருதை வென்றுள்ளது. இப்படத்தில் இடம்பெற்ற ‘ஜாஸ்மீன்’ பாடலைப் பாடிய சுந்தர ஐயருக்கு சிறந்த பின்னணிப் பாடகர் விருதைப் பெறவுள்ளார். சிறந்த நடிகராக அக்ஷய்குமார், நடிகையாக சி.எம்.சுரபி உள்ளிட்டோர் விருது பெறவுள்ளார்கள்.
இவ்விருதுகள் அறிவிப்பு முடிந்தவுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் தேசிய விருதுக் குழுவை கடுமையாக சாடினார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இது குறித்து “தேசிய விருதுக் குழுவில் உள்ளவர்களின் செல்வாக்கும் பாரபட்சமும் தெளிவாகத் தெரிகிறது, இது ஒரு தலைபட்சமானதே” என்று தெரிவித்திருந்தார்.
ஏ.ஆர்.முருகதாஸின் குற்றச்சாட்டுக்கு தேசிய விருதுக் குழுவில் இருந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள்.
அதற்கு “நடுவரே.. இது எனது கருத்து மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் கருத்து. எனவே தயவுகூர்ந்து வாக்குவாதம் வேண்டாம். உண்மையத் தோண்டி எடுக்க வேண்டாம்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.