புத்தாண்டு புது விருந்து: மாங்காய்-வேப்பம்பூ பச்சடி
என்னென்ன தேவை?
மாங்காய் – 1
வெல்லம் – அரை கப்
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கடுகு, உளுந்து – தலா 1 டீஸ்பூன்
பெருங்காயம் – அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
கறிவேப்பிலை, வேப்பம்பூ – சிறிதளவு
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
மாங்காயைச் சிறு சிறு சதுரத் துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள். வெல்லத்தைச் சிறிது தண்ணீர் சேர்த்து, தூசு போக வடிகட்டித் தனியே வையுங்கள். ஒரு பாத்திரத்தில் மாங்காய் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வேகவையுங்கள். தேவையான உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேருங்கள். மாங்காய் நன்றாக வெந்ததும் வடிகட்டிய வெல்லம் சேருங்கள். மாங்காயும் வெல்லமும் நன்கு கலந்து ஜாம் பதம் வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.
வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்துச் சூடானதும் கடுகு, உளுந்து, பெருங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, வேப்பம் பூ ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்துத் தாளித்து பச்சடியின் மேல் கொட்டுங்கள். அருமையான மாங்காய்-வேப்பம்பூ பச்சடி தயார்.