தமிழகத்தில் பாரதீய ஜனதா காலூன்றும் மு.க.ஸ்டாலினுக்கு தமிழிசை பதிலடி
அம்பேத்கர் பிறந்த நாளையட்டி கோயம்பேட்டில் அவரது சிலைக்கு மாலை அணிவித்த தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், “தமிழகத்தில் பா.ஜனதா எப்போதும் காலூன்ற முடியாது” என்று கூறினார். அதற்கு பதிலடி கொடுத்து பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் துறைமுகத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு கூறியதாவது:-
தமிழகத்தில் பா.ஜனதா காலூன்ற முடியாது என்று சகோதரர் மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறார். எல்லா கட்சிகளுமே கிலி பிடித்தது போல் இதே கருத்தைத்தான் கூறுகின்றன. இதன்மூலம் நாங்கள் வளர்ந்து வருகிறோம் என்பதை அவர்களே ஒத்துக் கொண்டுள்ளார்கள். நாங்கள் காலூன்றுவதை மு.க.ஸ்டாலின் பார்க்கத் தான் போகிறார். 50 ஆண்டு காலம் ஆட்சி செய்து தோற்றுப்போன திராவிட கட்சிகளுக்கு வாய்ப்பு வழங்கிய மக்கள் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தும் பா.ஜனதாவுக்கு வாய்ப்பு தரமாட்டார்களா? அண்ணாவால் காலூன்றப்பட்டு கலைஞரால் உறுதிப்படுத்தப்பட்ட கால் பறிபோகாமல்பார்த்துக் கொள்ளுங்கள்.
பா.ஜனதா கால் ஊன்றுமா? ஊன்றாதா? என்பதை எங்கள் கட்சியினரும், தமிழக மக்களும் பார்த்துக் கொள்வார்கள். அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட தி.மு.க.வுக்கு என்ன உரிமை இருக்கிறது. இத்தனை ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தும் விவசாயிகளுக்காக கொண்டு வரப்பட்ட தொலைநோக்கு திட்டங்கள் என்ன? விவசாய பிரச்சினை ஒருநாள் பிரச்சினை இல்லை. குஜராத்தில் பாலைவன பகுதியிலும், விவசாயம் நடக்கிறது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு இரண்டு நதிகளை இணைத்து சாதித்துள்ளார். நீங்கள் செய்த சாதனை என்ன? விவசாயிகள் பிரச்சினையை அரசியலாக்கி லாபம் தேடித்தான் வந்திருக்கிறீர்கள். ஆக்கப்பூர்வமாக எதுவும் செய்யவில்லை.
விவசாயிகளுக்கு ஆதரவு போராட்டம் என்று கிண்டி பிரதான சாலையை பூட்டு போட்டு மூடி போராடும் அளவுக்கு டைரக்டர் கவுதமனுக்கு அனுமதி கொடுத்தது யார்? சட்டத்தை கையில் எடுக்கும் அதிகாரம் யார் கொடுத்தது? இந்த போராட்டத்தால் பொதுமக்கள், நோயாளிகள் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். பல விமானங்கள் தாமதமாகி இருக்கின்றன. எனவே அவர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.