90% கேன் வாட்டர் அபாயமானது!
‘‘உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி ஒரு மனிதன் குடிக்க, குளிக்க, சமையல் செய்ய என ஒரு நாளைக்கு 150 லிட்டர் தண்ணீர் தேவையாக இருக்கிறது. ஆனால், 8வது ஐந்தாண்டு திட்டத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் 40 லிட்டர் தண்ணீர் வழங்கினாலே போதுமானது என்கிறார்கள். தமிழ்நாட்டில் மொத்தம் 13 ஆயிரம் கிராமங்கள் இருக்கின்றன. அவற்றில் 300 கிராமங்களில் தமிழ்நாடு சுகாதாரசங்கம் சார்பில் ஒரு கணக்கெடுப்பு நடத்தினோம்.
அதில் ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு பத்து லிட்டர் தண்ணீர் கூட கிடைப்பதில்லை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தோம்…’’ என வருத்தத்துடன் பேச ஆரம்பிக்கிறார் முன்னாள் சுகாதாரத்துறை இயக்குனரான டாக்டர் எஸ்.இளங்கோ. ‘‘30 ஆண்டுகளுக்கு முன் பாட்டிலில் அடைத்து தண்ணீரை விற்கும் வழக்கம் நம்மிடம் கிடையாது. கேன் வாட்டர் பிசினஸும் புழக்கத்தில் இல்லை. குடிநீரை அரசே வழங்கியது.
ஆனால், தனியார் கம்பெனிகள் இதில் இறங்கிய பிறகு ஆண்டுக்கு இரண்டாயிரம் கோடி ரூபாய் வருமானம் கொழிக்கும் தொழிலாக தண்ணீர் பிசினஸ் மாறிவிட்டது. கேன் வாட்டர், பாக்கெட் வாட்டர், பாட்டில் வாட்டர் என எல்லாமே தரமற்றதாக வந்து கொண்டிருக்கின்றன. இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தாலும் களப்பணியாற்றி செயல்பட போதுமான பணியாளர்கள் அவர்களிடம் இல்லை…’’ என்றவர் இதில் அரசின் அக்கறையின்மையையும் சுட்டிக்காட்டினார்.
‘‘ஒரு தண்ணீர் நிறுவனத்திற்கு ஐ.எஸ்.ஐ தரச்சான்றிதழ் அளிக்க வரும் நிறுவனம், பெயருக்கு ஏதோ சோதித்துவிட்டு முத்திரையை அளித்துவிட்டு சென்றுவிடுகின்றனர். அதன்பிறகு அந்த தண்ணீர் தரத்துடன் வருகிறதா என்று கூட பரிசோதிப்பதில்லை. மெட்ரோ வாட்டரை தனியாரிடம் தாரைவார்த்து விட்டதால் அரசு நிறுவனங்கள் அதுபற்றிய அக்கறையே இல்லாமல் உள்ளனர்.
ஒருமுறை பயன்படுத்தப்பட்ட கேனை மறுபடியும் பயன்படுத்தக்கூடாது. ஆனால், பழைய கேனை எடுத்துச் சென்று மீண்டும் அதில் தண்ணீரை அடைத்து விற்கிறார்கள். காலி கேனில் மறுபடியும் தண்ணீர் நிரப்புவதால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வேதிப் பொருட்கள் அதில் கலக்கின்றன. பயன்படுத்தப்பட்ட கேனை வெந்நீர் ஊற்றி சுத்தம் செய்த பிறகே புது லேபிள் ஒட்டி விற்பனைக்கு கொண்டு வரவேண்டும். பிளாஸ்டிக் பாட்டிலை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதன்படி பார்த்தால் 90% கேன் வாட்டர் குடிப்பதற்கு உகந்தது அல்ல!’’ அழுத்தம் திருத்தமாக சொல்கிறார் டாக்டர்