இந்திய கம்யூனிஸ்ட், விசிக பங்கேற்பு: திமுக சார்பில் நாளை அனைத்து கட்சி கூட்டம் – அதிமுக, பாஜக அல்லாத கட்சிகளுக்கு அழைப்பு
விவசாயிகள் பிரச்சினைகள் பற்றி விவாதிப்பதற்காக திமுக சார்பில் நாளை (ஏப்ரல் 16) அனைத்துக் கட்சிக் கூட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது.
திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அதிமுகவின் இரு அணிகள், பாஜக தவிர மற்ற கட்சிகளுக்கு திமுக சார்பில் தனித்தனியாக அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை நிலையச் செயலாளர் பூச்சி எஸ்.முருகன் ஆகியோர் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை நேரில் சந்தித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவசாயிகள் பிரச்சினைக்காக திமுக நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்தில் மக்கள் நலக் கூட்டணி யில் இருந்த இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) ஆகியவை பங்கேற்க விரும்பின. ஆனால், கூட்டணியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் களால் கலந்து கொள்ள முடிய வில்லை. ஆனாலும், அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு விசிக தலைவர் திருமாவளவன் ஆதரவு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் திமுகவின் அழைப்பை ஏற்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தர சன், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதனை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் உறுதி செய்துள் ளார்.
இது தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் நேற்று செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:
கடந்த முறை அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தபோது அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத் திருந்தோம். தற்போது விவசாயி களின் நிலைமை மேலும் மோச மாகியுள்ளது. இதற்கு மத்திய, மாநில அரசுகள்தான் காரணம் என்பதால் தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அதிமுக, மத்தியில் ஆளுங்கட்சியாக உள்ள பாஜக தவிர மற்ற அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம்.
விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து தீர்வு காண்பது குறித்து விவாதிப்பதற்காகவே அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளோம். இதில் இந்திய கம்யூனிஸ்ட். விசிக பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆட்சி மாற்றம் குறித்து விவாதிப்பதற்காக நாங்கள் கூட்டம் நடத்தவில்லை என்றார்.
திமுகவின் அழைப்பு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது, ‘‘அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு திமுகவிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. இது குறித்து கட்சியின் செயற்குழு உறுப்பினர்களுடன் இன்று விவாதித்து முடிவெடுக்க இருக்கிறோம்’’ என்றார்.