ரயிலில் தொங்கியபடி செல்பி எடுத்தபோது தவறி விழுந்த; நண்பனைக் காப்பாற்ற முயன்ற 4 இளைஞர்கள் பலி
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே ஓடும் ரயிலில் தொங்கிய படி “செல்பி” எடுக்க முயன்ற போது கீழே விழுந்த நண்பனைக் காப்பாற்ற முயன்ற சக நண்பர்கள் 4 பேர் உயிரைப் பறிகொடுத்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற் படுத்தி உள்ளது.
ஓடும் ரயில் அருகில் நின்று கொண்டும், ஆற்றில் வெள்ளப் பெருக்குக்கு மத்தியிலும், பாரா சூட்டில் பறந்து கொண்டும் “செல்பி” எடுப்பவர்கள் அதனால் ஏற்படும் விபரீதத்தை உணர்வ தில்லை. கரணம் தப்பினால் மரணம் என்பதற்கு உதாரணமாக, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது.
கொல்கத்தாவின் தும்தும் பகுதியைச் சேர்ந்த இளைஞர் தாரக்நாத் மாகல், தனது நண்பர்கள் சுமித்குமார், சஞ்சீவ் போலே, காஜல் சாகா மற்றும் சந்தன் போலே ஆகியோருடன் ஹவுரா அருகில் உள்ள தாரகேஷ்வரர் கோயிலுக்குச் சுவாமி தரிசனம் செய்வதற்காகச் சென்றார்.
தரிசனம் முடிந்து பின்னர், அவர்கள் ரயிலில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது, ஓடும் ரயிலின் கதவருகே தொங்கியபடி செல்பி எடுக்க விரும்பியுள்ளனர். அப்போது, அந்த ரயில் ஹவுரா அருகே லிலுவா மற்றும் பெலூர் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது, ரயில் பெட்டியில் மக்கள் கூட்டம் அதிகமில்லை. தாரக்நாத் நண்பர்களுடன் “செல்பி” எடுக்க முயன்றுள்ளார். அப்போது, அவருடைய கால் தவறி, கீழே விழுந்து விட்டார்.
உடனடியாக அவரை காப்பாற்றும் முயற்சியாக சக நண்பர்கள் ஒருவர் பின் ஒருவராக ரயிலில் இருந்து கீழே குதித்துள்ளனர். நண்பரைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் கீழே குதித்த அவர்கள் எதிர்பக்கத்தில் வந்த மற்றொரு ரயிலைக் கவனிக்கவில்லை.
படுவேகமாக வந்த அந்த ரயில் அவர்கள் மீது ஏறியதில் சுமித்குமார், சஞ்சீவ் போலே, காஜல் சாகா மற்றும் சந்தன் போலே ஆகிய 4 பேரும் உயிரிழந்தனர். படுகாயமடைந்த தாரக்நாத் மாகல், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.