உ.பி. பள்ளிகளில் தலைவர்கள் பிறந்தநாள் விடுமுறை ரத்து: ஆதித்யநாத் முடிவு
உத்தரப்பிரதேச முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றதும் மாநிலத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
சட்ட விரோத இறைச்சி கூடம், பசு கடத்தல் போன்றவற்றுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்தார்.
சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும் வாலிபர்களின் ஈவ்-டீசிங்கை தடுக்கவும் போலீசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் பள்ளிகளில் விடுமுறை நாட்களை குறைக்க முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் முடிவு செய்துள்ளார். தற்போது பள்ளிகளில் தலைவர்களது பிறந்தநாள், நினைவு நாள் போன்றவற்றுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால் அந்த நாளின் முக்கியத்துவம் பற்றி அவர்களுக்கு தெரியவில்லை என்று தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:- ஆண்டுக்கு 220 நாட்கள் பள்ளிகள் செயல்பட வேண்டும். இதில் 55 அரசு விடுமுறை நாட்கள், 52 ஞாயிற்றுக்கிழமை, கோடை விடுமுறை, மழைக்கால விடுமுறை, தேர்வு விடு முறை என மொத்தமே 130 முதல் 140 நாட்கள் வரை தான் பள்ளிகள் செயல்படுகின்றன.
எனவே தலைவர்கள் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் போன்றவற்றுக்கு அளிக்கப்படும் விடுமுறை நாட்களை குறைக்க உத்தரப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளதாக முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.