டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்திய தாலி அறுப்பு போராட்டம்
வறட்சி நிவாரணம், கடன் தள்ளுபடி போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் நாள்தோறும் நூதன போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டம் நேற்று 33–வது நாளாக நீடித்தது.
நேற்று முன்தினம் சேலை கட்டி போராடிய விவசாயிகள், நேற்று தாலி அறுப்பு போராட்டம் நடத்தினார்கள். இதற்காக விவசாயிகள் நேற்று காலை சேலை அணிந்து, கழுத்தில் தாலி கட்டிக் கொண்டனர். பின்னர் சிறிது நேரத்தில் தாலி அறுப்பு போராட்டம் தொடங்கியது. போராட்டம் நடைபெறும் ஜந்தர் மந்தரில் இருந்து கேரள இல்லம் வரை விவசாயிகள் கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றனர்.
குறிப்பிட்ட ஒரு இடத்தில் நின்று, கழுத்தில் கிடந்த தாலிகளை விவசாயிகள் அறுத்தனர்.
ஒப்பாரி பாடல்கள்
அப்போது கொங்குநாடு மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் சிலர் அங்கு வந்து விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். அவர்கள் பிரதமருக்கு கோரிக்கை விடுக்கும் வகையில் ஒப்பாரி பாடல்களை பாடினார்கள்.
இந்த தாலி அறுப்பு போராட்டம் டெல்லிவாசிகள், சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்தது.
தாலி அறுப்பு நிகழ்ச்சி முடிந்ததும், விவசாயிகள் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்து அமர்ந்தனர்.
ஆதரவு
முன்னதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. டி.ராஜா, நாகூர் தர்காவின் தலைவர் செய்யது முகமது காசிபா ஆகியோர் நேற்று போராட்ட குழுவினரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.