உத்தப்பா, பாண்டே, நரைன், குல்தீப் பங்களிப்புடன் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது கொல்கத்தா
கொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் 14-வது போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இதன் மூலம் அட்டவணையில் முதலிடத்திற்குச் சென்றது கொல்கத்தா.
டாஸ் வென்ற டேவிட் வார்னர் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்ய, முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது, தொடர்ந்து ஆடிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி தழுவியது.
கொல்கத்தா வெற்றிக்கு பேட்டிங்கில் உத்தப்பா, மணீஷ் பாண்டே பங்களிப்பு செய்ய பவுலிங்கில் சுனில் நரைன், குல்தீப் யாதவ் ஆகியோர் சுழலில் சிக்கனம் காட்டி பங்களிப்பு செய்தனர்.
ராபின் உத்தப்பா 39 பந்துகளில் 5 பவுண்டரிகள் 4 அருமையான சிக்சர்களுடன் 68 ரன்கள் எடுக்க மணீஷ் பாண்டே 35 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 46 ரன்கள் எடுத்தார். இருவரும் இணைந்து 3-வது விக்கெட்டுக்காக 77 ரன்களைச் சேர்த்தனர். யூசுப் பத்தான் 15 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 21 எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.
கொல்கத்தாவில் இன்று சுனில் நரைனை இறக்கியது பயனளிக்கவில்லை, அவர் நெஹ்ராவை ஒரு நேர் பவுண்டரி அடித்து 6 ரன்களில் புவனேஷ் குமாரின் அருமையான ஸ்பெல்லில் யார்க்கர் பந்தில் ஸ்டம்ப் எகிற வெளியேறினார். அடுத்த பந்தே புவனேஷ் அவுட்ஸ்விங்கரை வீச உத்தப்பா எட்ஜ் செய்தார், மிகப்பெரிய எட்ஜ் அது, ஆனால் நடுவர் அனில் தந்தேகர் அவுட் தரவில்லை, மிகப்பெரிய தவறான தீர்ப்பு சன்ரைசர்ஸ் தோல்விக்கே இட்டுச் சென்றது என்றால் மிகையாகாது.
அதன் பிறகு உத்தப்பா பவுலர்களின் எண்ணத்துக்கு எதிராக விளையாடினார், மேலேறி வருவது போல் பாவ்லா காட்டி ஷார்ட் பிட்ச் போட வைத்து பின்னால் சென்று வெளுப்பது, இப்படித்தான் அவர் 2 சிக்சர்களை விளாசினார், இதைத் தவிரவும் பந்தின் லெந்தை மிகவும் சீக்கிரமாகவே அவர் கணித்து சில அற்புதமான டைமிங் ஷாட்களை ஆடினார், அதுவும் அபாய ஆப்கன் ஸ்பின்னர் ரஷீத் கானை லாங் ஆனில் அடித்த சிக்ஸ் அற்புதம். அதே ஓவரில் 15 ரன்களில் கம்பீர் மோசமான ஷாட்டினால் ரஷீத் கானிடம் பவுல்டு ஆகி வெளியேறினார். மணீஷ் பாண்டே 8 ரன்களில் இருந்த போது பிபுல் சர்மாவை மேலேறி வந்து ஆடிய போது பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு பின்னால் சென்றது கேட்ச் வாய்ப்பு கோட்டை விடப்பட்டது, ஸ்டம்பை அடித்திருந்தாலும் பாண்டே அவுட் ஆகியிருப்பார் அதையும் தவற விட்டார் விக்கெட் கீப்பர் நமன் ஓஜா. பாண்டேயும் ரன்களில் ஈடுபட்டார், இருவரும் இணைந்து 77 ரன்களைச் சேர்த்தனர்.
முதலில் உத்தப்பா 68 ரன்களில் கட்டிங் பந்தில் அவுட் ஆனார். பாண்டே, யூசுப் பத்தான் இணைந்து ஸ்கோரை 153 ரன்களுக்குக் கொண்டு சென்றனர், பாண்டே அப்போது 46 ரன்களில் புவனேஷ் குமாரிடம் வீழ்ந்தார். புவனேஷ் குமார் 4 ஓவர்களில் 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ரஷித் கான் 4 ஓவர்களில் 29 ரன்களுக்கு 1 விக்கெட். நெஹ்ரா, கட்டிங் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்ற கொல்கத்தா 172/6 என்று முடிந்தது.
கொல்கத்தா ஸ்பின்னர்கள் நரைன், குல்தீப் அபாரம்!
இலக்கைத் துரத்திய போது ஷிகர் தவண், வார்னர் ஆகியோர் பவர் பிளேயில் 45 ரன்களை எடுத்தனர். அப்போதுதான் குல்தீப் யாதவ் 26 ரன்களில் வார்னரை கழற்றினார். முன்னதாக 23 ரன்களில் ஷிகர் தவன், யூசுப் பத்தான் பந்தை சரியாக அடிக்காமல் லாங் ஆஃபில் கேட்ச் ஆனது. ஹென்ரிக்ஸ் 13 ரன்களில் அடுத்ததாக கிறிஸ் வோக்ஸ் பந்தை அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். யுவராஜ் சிங் களமிறங்கி அற்புதமாக ஆடினார் இவரது ஆட்டத்தில் புதிய மெருகு கூடியுள்ளது. அதுவும் உமேஷ் யாதவ் பந்தை நேராக அடித்த சிக்ஸ் உண்மையில் மெஜஸ்டிக் ரகம், இதனை எவ்வளவு தடவை வேண்டுமானாலும் ரீப்ளே போட்டு பார்க்கலாம். பிறகு அதே ஓவரில் புல்-ஷாட் பவுண்டரியையும் யுவராஜ் அடித்தார். பிறகு கிறிஸ் வோக்ஸ் பந்தில் கவரில் அடித்த சிக்ஸும் அபாரமான ஷாட். ஆனால் 16 பந்துகளில் 2 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் அருமையாக ஆடிய யுவராஜ் சிங், வோக்ஸ் வீசிய வேகம் குறைந்த பந்தை லாங் ஆனில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
முன்னதாக ஹூடா 1 பவுண்டரி 1 சிக்சருடன் 7 பந்துகளில் 13 ரன்கள் எடுத்த நிலையில் நரைனிடம் ஏமாந்து ஸ்டம்ப்டு ஆனார். கட்டிங் 15 ரன்களில் போல்ட்டிடம் ஆட்டமிழக்க 17.1 ஓவர்களில் 129/6 என்று தோல்வி நிலைக்கு வந்தது சன் ரைசர்ஸ். நமன் ஓஜா 11 ரன்களையும் பிபுல் ஷர்மா 21 ரன்களை எடுத்தாலும் வெற்றிக்கு அருகில் அழைத்துச் செல்ல முடியவில்லை. 155/6 என்று முடிந்தது சன் ரைசர்ஸ்.
முக்கியக் காரணம் சுனில் நரைன், குல்தீப் யாதவ் இணைந்து 8 ஓவர்களில் 41 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதே. இதோடு ராபின் உத்தப்பா கடைசி 18 பந்துகளில் 38 ரன்களை விளாசி ஸ்கோரை 172 ரன்களுக்கு கொண்டு சென்றதும் ஹைதராபாத் தோல்விக்குக் காரணமானது. குறிப்பாக சுனில் நரைன் தனது 4 ஓவர்களில் 18 ரன்களையே கொடுத்தார் அதுவும் ஒரேயொரு பவுண்டரிதான் இவரை அடிக்க முடிந்தது. குல்தீப் யாதவ் 23 ரன்கள் விட்டுக் கொடுத்தார், இதில் 2 பவுண்டரி 1 சிக்சர் அடங்கும்.
ஆட்ட நாயகனாக ராபின் உத்தப்பா தேர்வு செய்யப்பட்டார், கொல்கத்தா அட்டவணையில் முதலிடம் பிடித்தது.