13 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது: சென்னையில் இந்தாண்டு முதன்முறையாக 106 டிகிரி
சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு ‘மாருதா’ என இலங்கை நாடு பெயரிட்டுள்ளது. இது ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணி நிலவரப்படி மியான்மர் கடலோரப் பகுதியிலிருந்து 240 கிமீ தொலைவில் மையம் கொண்டிருந்தது. அது இன்று நள்ளிரவு கரையை கடக்கக்கூடும். இந்த புயல், தமிழக பகுதியில் இருந்த ஈரப்பதத்தை ஈர்த்துச் சென்றுவிட்டதால், இங்கு வெப்பநிலை அதிகரித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பம் மேலும் அதிகரிக்கும்.
இந்நிலையில் மாருதா புயலின் தாக்கத்தால், இந்த ஆண்டு முதல் முறையாக சென்னையில் நேற்று 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நேற்று மாலை 5.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக வேலூரில் 109.22 டிகிரி ஃபாரன்ஹீட், கரூர் பரமத்தியில் 108.32, மதுரையில் 106.52, சென்னை, திருச்சியில் தலா 106.34 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது என்றார்.