Breaking News
புதிய மதுக்கடைகள் திறக்க கடும் எதிர்ப்பு: படூரில் டாஸ்மாக் கடை சூறை – கும்மிடிப்பூண்டியில் மதுபான வாகனம் சிறைபிடிப்பு

கேளம்பாக்கம் அடுத்த படூரில் புதிதாகத் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையில் புகுந்த பொதுமக்கள் மதுபாட்டில்களை அடித்து உடைத்தனர். இதுதொடர்பாக 132 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், முன்னாள் ஊராட்சி தலைவர் உட்பட 9 பேரைக் கைது செய்தனர். இதேபோன்று, கும்மிடிப்பூண்டியில் மதுபாட்டில்களை ஏற்றி வந்த வாகனத்தை சிறைபிடித்தும், டாஸ்மாக் கடைக்கு வாடகைக்கு கட்டிடம் தந்த உரிமையாளரின் வீட்டை முற்றுகையிட்டும் போராட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த படூரில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி குடியிருப்புப் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை ஒன்று திறக்கப்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் இரவு டாஸ்மாக் கடையில் புகுந்து மதுபான பாட்டில்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.

மேலும், டாஸ்மாக் கடையை அகற்றும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்த பெண்கள், உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிப்போம் என எச்சரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.

மேலும், டாஸ்மாக் கடையில் ரூ.1.60 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை சேதப்படுத்தியதாக 60 பெண்கள் உட்பட 132 பேர் மீது கேளம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், படூர் ஊராட்சியின் முன்னாள் தலைவர் பரமசிவம் உட்பட 9 பேரை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். மேலும், சிலரை போலீஸார் தேடி வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, கேளம்பாக்கம் ஆய்வாளர் கோவிந்தராஜிடம் கேட்டபோது, ‘டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை உடைத்து சேதப்படுத்தியதால், அரசு சொத்தை சேதப்படுத்தியதாக பெண்கள் உட்பட சம்பந்தப்பட்ட 132 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

கும்மிடிப்பூண்டி

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சாமிரெட்டி கண்டிகை ரயில்வே கேட் அருகே புதிய டாஸ்மாக் கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் அருகே அக திகள் முகாம், குடியிருப்புப் பகுதிகள் உள்ளதால் பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு டாஸ்மாக் ஊழியர்கள் மதுக்கடைக்கு தேவையான மதுபாட்டில்கள் வேனில் கொண்டு வந்து இறக்கினர். இதையறிந்த, அகதிகள் முகாமைச் சேர்ந்த பெண்கள் உட்பட அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர்.

மதுபானங்களை ஏற்றி வந்த வாகனத்தை சிறைபிடித்தனர். கடையை வாடகைக்கு கொடுத்த உரிமையாளர் வீட்டையும் முற்றுகையிட்டனர். இதுதொடர்பாக, போலீஸார் அகதிகள் முகாம் நிர்வாகத் தலைவர் கண்ணன் உள்ளிட்ட 6 பேரைக் கைது செய்தனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.