ஐபிஎல் கிரிக்கெட் தொடர்: 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி
குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
குஜராத் லயன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில் டாஸில் வென்ற மும்பை அணி பீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. இதைத்தொடர்ந்து குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிவைன் ஸ்மித்தும், மெக்கல்லமும் களம் இறங்கினர்.
குஜராத் அணி 1 ரன் எடுத்திருந்த நேரத்தில் மெக்லினகனின் பந்தில் ராணாவிடம் கேட்ச் கொடுத்து ஸ்மித் ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து மெக்கல்லமுடன் ரெய்னா ஜோடி சேர்ந்தார். ஆரம்பத்தில் தடுமாற்றத்துடன் பந்துகளை எதிர்கொண்ட மெக்கல்லம், அதன் பிறகு வேகமெடுத்து பவுண்டரிகளும் சிக்சர்களுமாக விளாசினார். 7.1 ஓவரில் 50 ரன்களை எடுத்த இந்த ஜோடி அதன் பிறகு அதிரடியாக ஆடத்தொடங்கியது. அணியின் ஸ்கோர் 81 ரன்களாக இருந்த நிலையில் சுரேஷ் ரெய்னா ஆட்டம் இழந்தார். 29 பந்துகளில் 28 ரன்களைச் சேர்த்த அவர், ஹர்பஜனின் பந்தில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
அவரைத் தொடர்ந்து மெக்கல்லம் (44 பந்துகளில் 64 ரன்கள்) அவுட் ஆக குஜராத் அணியின் ரன் எடுக்கும் வேகம் சற்று குறைந்தது. ஆனால் ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் தினேஷ் கார்த்திக் 26 பந்துகளில் 48 ரன்களையும், ஜேசன் ராய் 7 பந்துகளில் 14 ரன்களையும் நொறுக்க, குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்களை எடுத்தது.
வெற்றிபெற 177 ரன்களை எடுக்கவேண்டும் என்ற நிலையில் ஆடவந்த மும்பை அணி, எண்ணிக்கையை தொடங்கும் முன்பே பார்த்தீவ் படேலின் (0) விக்கெட்டை இழந்தது. இந்த விக் கெட்டை பிரவீன் குமார் கைப்பற்றி னார். ஆனால் அதன் பிறகு ராணா வும், பட்லரும் நிலைத்து ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். குறிப்பாக ராணா, மின்னல் வேகத்தில் ரன்களைக் குவித்தார். இந்த ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் மும்பை அணி 5.5 ஓவர்களில் 50 ரன்களை எட்டியது.
குஜராத் அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ராணா, 32 பந்துகளில் 50 ரன்களைக் கடந்தார். ஆனால் அரைசதம் அடித்த சிறிது நேரத்திலேயே 53 ரன்களில் டை வீசிய பந்தில் அவர் அவுட் ஆனார். அப்போது மும்பை அணியின் ஸ்கோர் 85 ரன்களாக இருந்தது. இதைத்தொடர்ந்து பட்லரும் (26 ரன்கள்) அவுட் ஆக மும்பை முகாமில் பதற்றம் ஏற்பட்டது. ஆனால் 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பொலார்டும் (39 ரன்கள்), ரோஹித் சர்மாவும் (40 ரன்கள்) பொறுப்பாக ஆடி மும்பை அணியை வெற்றிக்கு அருகே அழைத்துச் சென்றனர். இதைத்தொடர்ந்து மும்பை அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது.