தினகரனுக்கு அனைத்து கதவுகளும் மூடல்: கைது செய்ய போலீஸ் தீவிரம்?
தினகரன் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க, பாதுகாப்பை தீவிரப்படுத்த வேண்டும் என டில்லி குற்றப்பிரிவு போலீசார் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். இதனையடுத்து கடல்வழியாகவோ, விமானம் மூலமாகவோ தினகரன் தப்பிச் செல்லாமல் இருக்க போலீசார் உஷாப்படுத்தப்பட்டுள்ளனர்.
அன்னிய செலாவணி மோசடி வழக்கில், சென்னை எழும்பூர் கோர்ட்டில் இன்று ஆஜராக தினகரன் சென்றுள்ளார். இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு தினகரன் பணம் கொடுக்க முயற்சி செய்ததை உறுதி செய்வதற்கான ஆதாரங்களை டில்லி போலீசார் திரட்டி வருகின்றனர். கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் அளித்த தகவலின் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
விமானநிலையங்களுக்கு நோட்டீஸ் :
இந்நிலையில், தினகரன் வெளிநாடு குடியுரிமை பெற்றவர் என்பதால் அவர் வெளிநாடு தப்பி செல்ல வாய்ப்பு உள்ளதாக டில்லி போலீஸ் கருதுகிறது. கைது நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருவதால் வெளிநாடு தப்பிச் செல்ல தினகரன் திட்டமிட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமானவர் மூலம் டில்லி போலீஸ் தெரிந்து கொண்டுள்ளது. இதனால் அவர் தப்பிச் செல்லாமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தும்படி அனைத்து விமான நிலையங்களுக்கும் டில்லி போலீஸ் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தினகரன் எந்த விமான நிலையத்திற்கு வந்தாலும் உடனடியாக தகவல் அளிக்கும்படி நோட்டீசில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
எந்த நேரத்திலும் தினகரன் கைது :
தினகரன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்பதை உறுதி செய்யும் விதமாக சென்னை போலீசாரும் உஷாபடுத்தப்பட்டுள்ளனர். ஆயுதப்படை போலீசார் தங்களின் பணி இடங்களுக்கு திரும்புமாறு நேற்று இரவு பிறப்பித்த உத்தரவை சென்னை போலீஸ் கமிஷனர் கரன் சின்ஹா ரத்து செய்துள்ளார். இன்று காலை வெளியிட்டுள்ள புதிய உத்தரவின்படி, ஆயுதப்படை போலீசார் தயார் நிலையில் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.