லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு நிராகரிப்பு ‘ராகுல் காந்தி இப்போதுதான் பேச கற்று வருகிறார்’ பிரதமர் மோடி கிண்டல்
தன் மீது ராகுல் காந்தி கூறிய லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள பிரதமர் மோடி, தற்போதுதான் ராகுல் காந்தி பேச கற்று வருவதாக கிண்டலாக கூறினார்.
ராகுல் காந்தி குற்றச்சாட்டு
உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என எடுக்கப்பட்ட மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. இது மிகப்பெரும் ஊழல் என வர்ணித்த காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி தனிநபராக இந்த ஊழலில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் குஜராத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ‘பிரதமர் மோடி குஜராத் முதல்–மந்திரியாக இருந்த போது தொழில் நிறுவனங்களிடம் இருந்து ரூ.65 கோடி அளவுக்கு லஞ்சம் பெற்றார்’ என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
வாரணாசியில் மோடி
ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டை பிரதமர் நரேந்திர மோடி நிராகரித்துள்ளார். தனது பாராளுமன்ற தொகுதியான வாரணாசியில் நேற்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், அங்குள்ள இந்து பல்கலைக்கழகத்தில் நடந்த விழா ஒன்றிலும் பங்கேற்றார்.
அதில் உரையாற்றிய பிரதமர் ரூபாய் நோட்டு வாபசை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை கடுமையாக சாடினார். அவர் கூறியதாவது:–
மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை
ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் குறித்து பாராளுமன்றத்தில் பேச அனுமதித்தால் பூகம்பம் வரும் என ஒருவர் (ராகுல் காந்தி) கூறினார். ஆனால் அந்த அதிர்வை இன்னும் காணவில்லை. அவர் தற்போதுதான் பேச கற்று வருகிறார். இதை பார்க்கும் போது என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
ரூபாய் நோட்டு வாபஸ் என்ற மிகப்பெரும் நடவடிக்கையின் விளைவுகளை நான் கருத்தில் கொள்ளவில்லை என ஏராளமானோர் குற்றம் சாட்டி வருகின்றனர். உண்மையை சொன்னால் ஒரே ஒரு விஷயத்தை மட்டுமே என்னால் கணக்கில் கொள்ள முடியவில்லை.
அரசியல் கட்சிகளின் திமிர்
அது என்னவென்றால் ஊழலில் ஈடுபட்டவர்களை காப்பாற்ற துடிக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களின் திமிரைத்தான் என்னால் கருத்தில் கொள்ள முடியவில்லை. எனினும் ஒருசிலரின் கருப்பு பணம் வெளியே வரும் இந்த நேரத்தில், மற்றவர்களின் கருப்பு அல்லது கெட்ட எண்ணங்களும் வெளியே வருவதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.
ஊழல் மற்றும் நேர்மையற்றவர்களை வலுக்கட்டாயமாக ஆதரிப்பது என்பது, தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானை போன்றது. பாகிஸ்தான் தனது நாட்டு பயங்கரவாதிகளை இந்தியாவில் ஊடுருவ செய்வதற்காக, எல்லையில் அவ்வப்போது தாக்குதலை நடத்தும். அதைப்போலவே ஊழல்வாதிகளை காப்பாற்ற ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் எதிர்த்து வருகின்றன.
மன்மோகன் சிங்
நாட்டில் 50 சதவீதம் பேர் இன்னும் ஏழையாக இருக்கும் போது ரொக்கமில்லா பரிவர்த்தனையை எப்படி செயல்படுத்த முடியும்? என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கேள்வி எழுப்புகிறார். இதைப்போல நாட்டில் 50 சதவீதம் பேர் இன்னும் மின்வசதி பெறவில்லை என முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறி இருக்கிறார்.
இவர்கள் எல்லாரும் என்னுடைய செயல்பாட்டு அறிக்கையை அளித்துள்ளார்களா? அல்லது தங்களுடைய சொந்த செயல்பாட்டை வெளிப்படுத்தி உள்ளனரா? யாருடைய தவறுகளை சுட்டிக்காட்டுகிறார்கள். மின்வசதி பெற்றிருந்த கிராமங்களில் இருந்த மின்கம்பங்களை நான்தான் சரித்து விட்டேனா?
காங்கிரஸ் தான் காரணம்
மக்களின் ஏழ்மை நிலை, மின் வசதி இல்லாதது மற்றும் 60 சதவீத கல்வியறிவு இல்லாத நிலைமைகளுக்கு என்னை குற்றம் சொல்ல முடியாது. பல்வேறு மட்டத்தில் நாடு பின்தங்கி இருப்பதற்கு காரணம் காங்கிரஸ் தான். ஏனெனில் 60 ஆண்டுகளாக நாட்டை ஆண்டு வந்தது அவர்கள்தான்.
இவ்வாறு நரேந்திர மோடி கூறினார்.
பலத்த பாதுகாப்பு
முன்னதாக வாரணாசி சுற்றுப்பயணத்துக்காக பபத்பூர் விமான நிலையத்தில் வந்து இறங்கிய பிரதமர் மோடியை உத்தரபிரதேச கதர்வாரிய மந்திரி பிரம்ம சங்கர் வரவேற்றார். பிரதமரின் வருகையை ஒட்டி மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
வாரணாசியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, பா.ஜனதா தொண்டர்களுடனான கலந்துரையாடலிலும் பங்கேற்றார். ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப்பின் தனது தொகுதிக்கு பிரதமர் சுற்றுப்பயணம் செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.