ஆப்கானிஸ்தானில் பயங்கரம் எம்.பி., வீட்டில் தற்கொலைப்படை தாக்குதல்; 8 பேர் பலி தாக்குதல் நடத்திய 3 பேர் சுட்டுக்கொலை
ஆப்கானிஸ்தானில் எம்.பி., வீட்டில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 8 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
தலீபான்கள் ஆதிக்கம்
அமெரிக்காவில் 2001–ம் ஆண்டு செப்டம்பர் 11–ந் தேதி அல்–கொய்தா அமைப்பினர் நடத்திய அதிபயங்கர தாக்குதல்களை தொடர்ந்து, அவர்களுக்கு அடைக்கலம் தந்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அங்கு ஆட்சியில் இருந்த தலீபான்களை விரட்டி அடித்து மக்களாட்சியை ஏற்படுத்தியது.
15 ஆண்டுகளாகியும், ஆப்கானிஸ்தானில் தலீபான்களை ஒழிக்க முடியாமல் அந்த நாட்டு அரசும், அமெரிக்க கூட்டுப்படைகளும் திணறி வருகின்றன.
எம்.பி., வீட்டில் தாக்குதல்
இந்த நிலையில் அங்கு போதைப்பொருளான அபினுக்கு பிரசித்தி பெற்ற ஹெல்மாண்ட் மாகாணத்தில், பெருகி வரும் சட்டம்–ஒழுங்கு பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினராக உள்ள மிர்வாலியின் காபூல் நகர வீட்டில் நேற்று முன்தினம் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இதை மோப்பம் பிடித்த தலீபான் அமைப்பின் தற்கொலைப்படையினர் 3 பேர், மிர்வாலியின் வீட்டுக்குள் நுழைந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். அங்கிருந்த பாதுகாப்பு படையினரும் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க தொடங்கினர்.
8 பேர் பலி
இரு தரப்பினருக்கும் இடையேயான கடும் துப்பாக்கிச்சண்டை நேற்று அதிகாலை வரை நீடித்தது.
தற்கொலைப்படையினர் தாக்குதலின்போது, மிர்வாலி எம்.பி., வீட்டின் மொட்டை மாடி மீது ஏறி, வெளியே குதித்து காயங்களுடன் உயிர் தப்பினார். தற்போது அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆனால் அவரது பேரக்குழந்தைகள் 2 பேர், காந்தகார் எம்.பி., ஒபைதுல்லா பாரிக்ஜாயின் 25 வயது மகன், மெய்க்காவலர்கள் உள்பட மொத்தம் 8 பேர் கொல்லப்பட்டனர்.
3 பேரும் சுட்டுக்கொலை
தாக்குதல் நடத்திய தற்கொலைப்படையினர் 3 பேரையும் பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்று விட்டனர்.
இந்த தாக்குதலுக்கு தலீபான்கள் பொறுப்பேற்றனர்.
மிர்வாலி எம்.பி., வீட்டில் தலீபான்கள் நடத்தியுள்ள தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் அதிபர் அஷரப் கனி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘‘இது மன்னிக்க முடியாத குற்றம், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு எம்.பி.யின் வீட்டில் தாக்குதல் நடத்தி இருப்பது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத பெருங்குற்றம்’’ என அவர் கூறினார்.
ஆப்கானிஸ்தானில் தற்போது சட்டம், ஒழுங்கு எந்த அளவுக்கு மோசமாகி வருகிறது என்பதற்கு மிர்வாலி எம்.பி.யின் வீட்டில் நடந்த இந்த தாக்குதலே உதாரணம் ஆகும்.