25ம் தேதி முழுஅடைப்புக்கு ஆதரவு: தமிழகம் முழுவதும் 4 லட்சம் லாரிகள் ஓடாது
தமிழகத்தில் வரும் 25ம் தேதி நடக்கும் பந்த்துக்கு ஆதரவு தெரிவித்து, அன்று 4 லட்சம் லாரிகள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் 25ம் தேதி, திமுக தலைமையிலான அனைத்து கட்சி சார்பில் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக முழுஅடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதற்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு அளித்துள்ளன. மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனமும் ஆதரவு அளித்துள்ளது.
இதுகுறித்து சம்மேளன மாநில தலைவர் குமாரசாமி கூறியதாவது: விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக வரும் 25ம் தேதி, ஒருநாள் லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. அன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகள் இயக்கப்படாது. தமிழகம் முழுவதும் சுமார் 4 லட்சம் சரக்கு வாகனங்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்கின்றன. விவசாயிகளின் பிரச்னையை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தீர்க்க முன்வர வேண்டும். இவ்வாறு குமாரசாமி கூறினார்.
தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் சின்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், விவசாயிகளின் நலன் காக்கவும், மாநிலம் முழுவதும் 25ம் தேதி நடக்க உள்ள வேலைநிறுத்த போராட்டத்தில் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கமும் கலந்து கொள்ளும்’’ என்றார். தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி கூறுகையில், தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 25ம் தேதி தமிழகத்தில் நடக்கும் முழுஅடைப்பு போராட்டத்துக்கு தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முழுஆதரவு அளிக்கிறது.
25ம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழகம் முழுவதும் மணல் லாரிகள் இயக்கப்படாது. இந்த போராட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மணல் லாரிகள் கலந்து கொள்ளும். விவசாயிகளின் பிரச்னையை தீர்க்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றார்.