உ.பி. சட்டப்பேரவையின்கூட்டம் நேரடி ஒளிபரப்பு : சபாநாயகர் தகவல்
உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவை கூட்டத்ைத 90 நாட்களுக்கு மேல் நடத்தவும், அவை நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று அம்மாநில சபாநாயகர் ஹிரதய் நாராயண் தீட்சித் கூறினார். உத்தரப் பிரதேச சட்டப்பேரவை சபாநாயகர் ஹிரதய் நாராயண் தீட்சித் கூறியதாவது: உத்தரப் பிரதேச சட்டப்பேரவை விதிமுறைகளின்படி, ஓர் ஆண்டில் பட்ஜெட், மழைக்காலம், குளிர்காலம் ஆகிய 3 கூட்டத்தொடர்களில் மொத்தம் 90 நாட்கள் சட்டப்பேரவை செயல்பட வேண்டும். மேலும், சாத்தியப்பட்டால் இரண்டு மாதங்கள் இடைவெளியில் 10 நாட்கள் சட்டப்பேரவை கூட்டத்தை நடத்தலாம். இதற்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்கள் சட்டப்பேரவையை குறைந்த நாட்களே நடத்தினர்.
மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சட்டப்பேரவை நீண்ட நாட்கள் நடத்த ஆர்வமாக உள்ளார். மேலும், 17வது உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவை நடத்த ஆர்வமாக உள்ளனர்.
எனவே, இனி ஒரு ஆண்டில் 90 நாட்களுக்கு மேல் சட்டப்பேரவை செயல்படும் என்ற நம்பிக்கை உள்ளது. சட்டப்பேரவை நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்பும் திட்டமும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் சிஸ்டம்
உத்தரப் பிரசேத முதல்வர் யோகி ஆதித்யநாத், கிராமப்புற மேம்பாட்டு துறை அதிகாரிகள் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அப்போது, அரசு பணியாளர்கள் பணிக்கு சரியான நேரத்தில் வருவதை உறுதி செய்ய அனைத்து அரசு அலுவலகங்களிலும் கைரேகை மூலம் வருகை பதிவு செய்யும் பயோமெட்ரிக் சிஸ்டத்தை நிறுவ உத்தரப் பிரதேச முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, அனைத்து அரசு அலுவலகங்களிலும் பயோமெட்ரிக் கருவி நிறுவப்பட உள்ளது.