வைகை அணையில் தெர்மாகோல் மிதக்க விட்ட விவகாரம் : பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மாற்றம்
வைகை அணையில் தண்ணீர் ஆவியாவதை தடுக்க தெர்மாகோல் திட்டத்தை முன்வைத்ததாகக் கூறி செயற்பொறியாளர் திடீர் இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வைகை அணையில் நீர் ஆவியாவதை தடுக்க கடந்த 20ம் தேதி அதிகாரிகளிடம் அமைச்சர் செல்லூர் ராஜூ யோசனை கேட்டுள்ளார். அப்போது அணையில் தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதியில் தெர்மாகோல் நிரப்பி விடலாம் என்ற திட்டம் பரிசீலிக்கப்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக, மறுநாள் (ஏப். 21) தெர்மாகோல் தண்ணீரில் மிதக்க விட்டப்பட்டது. ஆனால், மிதக்க விட்ட சில நிமிடங்களில் அத்தனை தெர்மாகோல் அட்டைகளும் கரை ஒதுங்க, திட்டம் படுதோல்வி அடைந்தது. இந்த நிகழ்வு அனைத்து சமூக வலைதளங்களிலும், பொதுவெளிகளிலும் அமைச்சர் செல்லூர் ராஜூ மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அவரது செயலை கண்டித்து கருத்துக்கள் வெளியிட்டனர். வலைத்தளங்களில் தனக்கு எதிராக கருத்துக்கள் பதிவிடப்படுவதைக் கண்ட அமைச்சர் அதிர்ச்சியடைந்தார். தனது ஆதரவாளர்கள் சிலரைக் கொண்டு, இணையதளங்களில் ‘தெர்மாகோல் திட்டம் புதுமையானது…’ என்கிற ரீதியில் ஆதரவு கருத்துகளை பதிவு செய்தார். ஆனால், அதற்கும் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பும், விமர்சனங்களும் கிளம்பின.
இதற்கிடையே பெரியாறு – வைகை கால்வாய் பாசனத்தின் செயற்பொறியாளர் முத்துபாண்டிதான் இதற்குக் காரணம் என திடீர் குற்றச்சாட்டு புதிதாக கிளப்பப்பட்டது. உடனே நடவடிக்கையில் இறங்கிய அரசு, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் முத்துபாண்டியை அதிரடியாக மாற்றம் செய்தது. அவர் சிறப்பு திட்டப் பணிக்கு நியமிக்கப்பட்டார். அவருடைய பதவிக்கு சீனிவாசன் என்பவர் நியமிக்கப்பட்டார். பணிமாற்றம் செய்யப்பட்ட முத்துபாண்டி அடுத்த மாதம் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முத்துப்பாண்டி பணிமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் பொதுப்பணித்துறை ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ‘அமைச்சர் செய்த தவறுக்கு, அதிகாரியை பலிகடா ஆக்குவதா’ என அவர்கள் வேதனை தெரிவித்தனர்.