ஜனாதிபதி தேர்தல் பொது வேட்பாளர் சோனியா, டி.ராஜா ஆலோசனை
ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் ேதசிய செயலாளர் டி.ராஜா சந்தித்து ஆலோசனை நடத்தினர். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம், ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்பாக, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடத்தப்பட உள்ளது. கடந்த 2012 ஜூலை மாதம், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளாரான மறைந்த பி.ஏ.சங்மாவை தேர்தலில் வென்று, பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார்.
இம்முறை, பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தங்களது வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதே நேரத்தில், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக காங்கிரஸ் கட்சி அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. அதனடிப்படையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஆகியோர் ஏற்கனவே சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.ராஜா, சோனியா காந்தியை சந்தித்து பேசினார். சுமார் 30 நிமிடம் நடந்த இந்த சந்திப்பில், அனைத்து மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளும் ஒப்புக்கொள்ளும் வகையில் வேட்பாளரை தேர்வு செய்ய இரு தலைவர்களும் சம்மதித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், அரசியல் சூழல் குறித்து ஆலோசித்த சோனியா, டி.ராஜா, அதிகரித்து வரும் சகிப்பின்மை குறித்தும் அதனால் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும் கவலை தெரிவித்தனர். தற்போது, மத்தியில் ஆளும் பாஜ கட்சி, 13 மாநிலங்களில் ஆட்சி செய்கிறது. ஜம்மு காஷ்மீர், ஆந்திராவில் ஆளும் கட்சியுடன் கூட்டணியில் உள்ளது. இதனால், ஜனாதிபதி தேர்தலில் பாஜ நிறுத்தும் வேட்பாளரை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து வருகின்றன.