உடல் பருமன் சிகிச்சை: எமிரேட்ஸ் செல்லும் குண்டு பெண்
உடல் எடையை குறைக்க இந்தியாவிற்கு வந்த எகிப்து நாட்டை சேர்ந்த குண்டு பெண் மும்பையில் இருந்து எமிரேட்ஸ் செல்கிறார்.எகிப்து நாட்டில் உள்ள கெய்ரோவை சேர்ந்த பெண் எமான் அகமது (வயது36). இவர் தனது 11 வயதில் பக்கவாத நோயாலும், உடல் பருமனாலும் படுத்த படுக்கையானார். சுமார் 25 ஆண்டுகள் கழிந்த நிலையில் எமான் அகமதுவின் எடை 490 கிலோவானது. எனவே அவர் உலகிலேயே மிகவும் குண்டான பெண்ணாக கருதப்பட்டு வந்தார்.இதனை தொடர்ந்து மும்பை சர்னி ரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை அவருக்கு சிகிச்சை அளிக்க முன்வந்தது. இதற்காக ரூ.2 கோடி செலவில் தனி அறை அமைக்கப்பட்டது. மேலும் விமானத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 11-ந்தேதி மும்பைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டார். பின்னர் 3 மாதம் உடல் எடை குறைப்பிற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது அவரின் எடை 242 கிலோவாக குறைந்திருப்பதாக சிகிச்சை அளித்து வரும் டாக்டர் முப்பாஷால் தெரிவித்து இருந்தார்.
மாற்றம் நிகழவில்லை:
இந்த நிலையில் அவருடன் வந்த சகோதரி சாய்மா சலீம் சிகிச்சை அளித்து வந்த டாக்டர் முப்பாஷல் மீது குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார். இது குறித்து தெரிவிக்கையில்:- எமானுக்கு அளித்து வந்த லேப்ரோஸ்கோபிக் சிகிச்சையில் எந்தவொரு மாற்றமும் நிகழவில்லை. 250 கிலோ குறைந்து இருப்பதாக கூறுவது தவறான தகவல். வெறும் 60 கிலோ தான் குறைந்து உள்ளது.
எமிரேட்ஸில் சிகிச்சை
இந்த பிரச்சனையை அடுத்து சாய்மா கோரிக்கையை ஏற்று நேற்று எமிரேட்ஸில் உள்ள புருஜீல் மருத்துவமனை டாக்டர்கள் வந்து எமான் அகமதுவை பரிசோதனை செய்தார்கள், அவர்கள் தங்கள் நாட்டில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிப்பதாக கூறிஉள்ளனர். இதனையடுத்து எமான் அகமது எமிரேட்ஸ் செல்கிறார். அங்குள்ள புருஜீல் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட உள்ளது.