ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: வேலவன் செந்தில்குமார் அதிர்ச்சி தோல்வி
ஆசிய ஸ்குவாஷ் தனிநபர் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியடைந்தார்.
சென்னையில் நடைபெற்று வரும் இந்த தொடரில் வேலவன் தனது 3-வது சுற்றில், 7-ம் நிலை வீரரான மலேசியாவின் யூன் சீ வெர்னை எதிர்த்து விளையாடினார். இதில் வேலவன் 1-11, 1-11, 8-11 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
மற்றொரு இந்திய வீரரான ஹரிந்தர் பால் சிங் சாந்து 4-11, 11-6, 8-11, 11-6, 11-6 என்ற செட் கணக்கில் 6-ம் நிலை வீரரான கத்தாரை சேர்ந்த அப்துல்லா அல் தமிமியை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார். அதேவேளையில் 4-ம் நிலை வீரரான ஹாங்காங்கின் யிப் புங் 12-10, 8-11, 11-8, 11-3 என்ற செட்கணக்கில் போராடி 11-ம் நிலை வீரரான இந்தியாவின் மகேஷ் மங்கோன்கரை வீழ்த்தினார்.
மகளிர் பிரிவில் இந்தியாவின் சசிகா இங் கலே 11-5, 11-3, 11-0 என்ற செட் கணக்கில் பிலிப் பைன்சின் அலிசாவை வீழ்த்தினார். மற்ற இந்திய வீராங்கனைகளான சுனைனா குருவிலா 6-11, 4-11, 6-11 என்ற செட் கணக்கில் ஹாங் காங்கின் டங் விங்கிடமும், ஊர்வசி ஜோஷி 8-11, 8-11, 8-11 என்ற கணக்கில் கொரியாவின் பார்க் யுநோக்கிடமும் தோல்வியடைந்தனர்.
2-ம் நிலை வீராங்கனையான ஜோஷ்னா சின்னப்பா 11-7, 11-9, 11-7 என்ற செட் கணக் கில் 13-ம் நிலை வீராங்கனையான பிலிப் பைன்ஸின் ஜெமிகா அரிபாடுவை வீழ்த்தினார்.
எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் போது ஆடுகளம் சேதம் அடைந்தது. இதனால் அடுத்த ஆட்டத்தில் களமிறங்க இருந்த தீபிகா பல்லிகல், சேதம் அடைந்த ஆடுகளத்தில் விளையாட மறுப்பு தெரிவித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.