ஈடன்கார்டனில் இன்று மோதல்: கொல்கத்தா வெற்றிக்கு தடைபோடுமா டெல்லி
ஐபிஎல் தொடரில் இன்று மாலை 4 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – டெல்லி டேர்டேவில்ஸ் அணிகள் மோதுகின்றன.
இரு முறை சாம்பியனான கொல்கத்தா அணி இந்த சீசனில் அபாரமாக விளையாடி வெற்றிகளை குவித்து வருகிறது. அந்த அணி 8 ஆட்டங்களில் 6 வெற்றி, 2 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
மேலும் அந்த அணியின் நெட் ரன் ரேட் +1.153 ஆக உள்ளது. மற்ற எந்த அணிகளும் இந்த அளவுக்கு அதிகமான நெட் ரன் ரேட்டை பெறவில்லை. கொல்கத்தாவுக்கு அடுத்தபடியாக மும்பை அணி +0.514 நெட் ரன் ரேட் பெற்றுள்ளது.
தொடர்ச்சியான வெற்றிகளின் மூலம் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றில் நுழைந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் கொல்கத்தா செயல்பட்டு வருகிறது. பெங்களூரு அணியை 49 ரன்களில் சுருட்டிய நிலையில் கடைசியாக புனே அணிக்கு எதிராக 183 ரன்கள் இலக்கை 11 பந்துகள் மீதம் வைத்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பேட்டிங்கில் ராபின் உத்தப்பா, கவுதம் காம்பீர், சுனில் நரேன், மணீஷ் பாண்டே, யூசுப் பதான் ஆகிய அனைவரும் நல்ல பார்மில் இருப்பது எவ்வளவு பெரிய இலக்கையும் அடையக்கூடிய திறனை அணிக்கு கொடுத்துள்ளது. பந்து வீச்சும் பலமாக இருப்பதால் எதிரணிக்கு அனைத்து வகையிலும் கொல்கத்தா அணி சவால் கொடுத்து வருகிறது.
இளம் இந்திய வீரர்கள் பலரை உள்ளடக்கிய டெல்லி அணி 6 ஆட்டத்தில் 2 வெற்றி, 4 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. 6 நாட்கள் ஓய்வுக்கு பின்னர் அந்த அணி புத்துணர்ச்சி யுடன் இன்றைய ஆட்டத்தை சந்திக்கிறது.
இரு அணிகளும் இதுவரை 18 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் கொல்கத்தா 11 ஆட்டங்களிலும், டெல்லி 7 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளன. டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சு உயர்ந்த தரம் வாய்ந்ததாக உள்ளது. கம்மின்ஸ், கிறிஸ் மோரிஸ், காகிசோ ரபாடா ஆகியோரை உள்ளடக்கிய வேகக்கூட்டணி மும்பை அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் கடும் நெருக்கடி கொடுத்தது.
இவர்களுடன் ஜாகீர்கான், முகமது சமி ஆகியோரின் அனுபவமும் பலம் சேர்ப்பதாக உள்ளது. பேட்டிங்கில் இளம் வீரர்களான சஞ்சு சாம்சன், ஸ்ரேயஸ் ஐயர், கருண் நாயர், ரிஷப் பந்த் ஆகியோர் சீராக ரன் குவிக்காதது பலவீனமாக உள்ளது.
கடைசியாக மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 143 ரன்கள் இலக்கை அடைய முடியாமல் 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்திருந்தது. இந்த ஆட்டத்தில் இளம் வீரர்கள் ஒட்டுமொத்தமாக மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.
24 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்த இந்த ஆட்டத்தில் கிறிஸ் மோரிஸ், ரபாடா ஆகியோரின் போராட்டத்தாலேயே 128 ரன்கள் வரை சேர்க்க முடிந்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் இளம் வீரர்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படக்கூடும்.
கொல்கத்தா அணியின் அதிரடி வீரரான கிறிஸ்லின் காயத்தில் இருந்து குணமடைந்துள்ளார். இதனால் அவர் இன்று களமிறங்க வாய்ப்புள்ளது. அவர் களமிறங்கும் பட்சத்தில் சுனில் நரேனின் பேட்டிங் வரிசை மாற்றப்படலாம். இந்த தொடரில் நரேனின் ஸ்டிரைக் ரேட் 182.66 ஆகவும், கிறிஸ் லினின் ஸ்டிரைக் ரேட் 192.30 ஆகவும் உள்ளது.
அணிகள் விவரம்:
டெல்லி டேர்டேவில்ஸ்:
ஜாகீர்கான் (கேப்டன்), முகமது ஷமி, சபாஷ் நதீம், ஸ்ரேயஸ் ஐயர், ஜெயந்த் யாதவ், அமித் மிஸ்ரா, கார்லோஸ் பிராத்வெயிட், ஷமா மிலிந்த், கிறிஸ்மோரிஸ், கருண் நாயர், பிரதியுஸ் சிங், ரிஷப் பந்த், சேம் பில்லிங்ஸ், சஞ்சு சேம்சன், ஆதித்யா தாரே, சயத் ஹலீத்அகமது, கோரே ஆண்டர்சன், மேத்யூஸ், ரபாடா, முருகன் அஸ்வின், பாட்கம்மின்ஸ், நவ்தீப் ஷைனி, அங்கீத் பாவ்னே, ஷசாங்க் சிங்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
கவுதம் காம்பீர் (கேப்டன்), டிரென்ட் போல்ட், டேரன் பிராவோ, பியூஸ் சாவ்லா, நாதன் கவுல்டர் நைல், ரிஷி தவண், சயன் கோஷ், செஷல்டன் ஜேக்சன், இஷாங்க் ஜக்கி, குல்தீப் யாதவ், கிறிஸ் லைன், சுனில் நரேன், மணீஷ் பாண்டே, யூசுப் பதான், ரோவ்மான் பொவல், அங்கித் ராஜ்புத், சஞ்ஜெய் யாதவ், ஷாகிப் அல் ஹசன், ராபின் உத்தப்பா, கிறிஸ் வோக்ஸ், சூர்ய குமார் யாதவ், உமேஷ் யாதவ்.
இடம்: கொல்கத்தா
நேரம்: மாலை 4
நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ்