ஜெ.,வின் கோடநாடு எஸ்டேட்டில் மேலும் ஒரு மர்மம் டிரைவர் விபத்தில் மரணம்
ஜெ.,வுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் காவலாளி கொல்லப்பட்ட வழக்கில் சந்தேகத்திற்கிடமாக தேடப்பட்டு வந்த ஜெ., மற்றும் சசிக்கு கார் ஓட்டிய டிரைவர் கனகராஜ் விபத்தில் சிக்கி இறந்திருப்பதால் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. கனகராஜ் விபத்தில் தான் இறந்தாரா அல்லது ஏதும் பின்புல சதி இருக்குமா என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கனகராஜ் முதலில் கோடநாடு எஸ்டேட்டில் தோட்டத்தில் பணியாற்றியதாகவும் பின்னர் அவர் போயஸ் கார்டனில் சசிக்கு கார் ஓட்டியதாகவும் , ஆனால் கடந்த 2013 ல் கனகராஜ் பணியில் இருந்து நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த இடைப்பாடி – சின்னசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கனகராஜ்(36). இவர் 2 ஆண்டுகளுக்கு முன் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் டிரைவராக பணியாற்றி உள்ளார். அதன் பிறகு சொந்தமாக கார் வாங்கிய இவர், வாடகைக்கு கார் ஓட்டி வந்துள்ளார். இன்று காலை இருசக்கர வாகனத்தில் கனகராஜ் தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். தென்னங்குடிபாளயைத்தில் எதிரே வந்த கார் மோதியதில், கனகராஜ் படுகாயம் அடைந்தார். ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்ப்டட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இவரது சாவில் மர்மம் ஏதும் இருக்குமா என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.