3 நாட்களாக நடத்தப்பட்ட விசாரணை முடிந்தது: தினகரனுக்கு எதிரான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க போலீஸ் முடிவு – சென்னையை சேர்ந்த 5 பேரிடம் விசாரிக்க சம்மன்
சென்னையில் 3 நாட்களாக நடத்தப் பட்ட விசாரணை முடிந்ததையடுத்து டிடிவி தினகரனை போலீஸார் மீண்டும் டெல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவருக்கு எதிரான ஆதாரங்களை திரட்டியுள்ள போலீஸார், அவற்றை நீதிமன்றத் தில் நாளை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
அதிமுக அம்மா கட்சி துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும், இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் ரூ.50 கோடி பேரம் பேசியதாகவும் டெல்லி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார், டெல்லியில் ஹோட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரசேகரை கடந்த 16-ம் தேதி இரவு கைது செய்தனர். முன்பண மாக கொடுக்கப்பட்ட ரூ.10 கோடி யில் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயை சுகேஷிடம் இருந்து டெல்லி போலீஸார் பறிமுதல் செய்தனர்.
சுகேஷ் கொடுத்த வாக்கு மூலத்தை அடிப்படையாக வைத்து டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா ஆகிய இருவரை யும் டெல்லிக்கு அழைத்து 4 நாட்கள் விசாரணை நடத்திய குற்றப்பிரிவு போலீஸார், கடந்த 25-ம் தேதி நள்ளிரவில் அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
போலீஸாரின் கோரிக்கையை ஏற்று தினகரன், மல்லிகார்ஜுனா இருவரையும் 5 நாள் காவலில் விசாரிக்க டெல்லி மாவட்ட நீதிமன்றம் அனுமதி கொடுத்தது. இதையடுத்து இருவரையும் கடந்த 27-ம் தேதி போலீஸார் சென்னைக்கு அழைத்துவந்தனர். அவர்களிடம் டெல்லி குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் சஞ்சய் ஷெகாவத் தலைமையிலான போலீஸார் 3 நாட்களாக தீவிர விசாரணை நடத்தினர்.
5 பேருக்கு சம்மன்
அடையாறில் உள்ள தினகரனின் வீட்டில் வைத்து அவரிடமும் அவரது மனைவி அனுராதாவிடமும் விசாரணை நடத்தினர். வீட்டில் சோதனையும் நடத்தப்பட்டது. அண்ணா நகரில் உள்ள மல்லிகார்ஜு னாவின் வீட்டிலும் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை யின்போது, வழக்குக்குத் தேவை யான சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, ஆதம்பாக்கம் நிலமங்கை நகரில் வசிக்கும் தினகரனின் நண்பர் மோகனரங்கம், கொளப்பாக்கம் பிலிப்ஸ் டேனியல், திருவேற்காடு அருகே சுந்தரசோழபுரத்தில் வழக்கறிஞர் கோபிநாத் மற்றும் பாரிமுனை, பெரம்பூரில் வசிக்கும் 2 பேர் என 5 பேரின் வீடுகளிலும் டெல்லி போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த 5 பேருக்கும் சம்மன் அனுப்பி டெல்லி வரவழைத்து விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள் ளனர்.
இதற்கிடையே, லஞ்சப் பணத்தை பரிமாற்றம் செய்த ஹவாலா தரகர் நரேஷ் என்பவரை டெல்லியில் போலீஸார் கடந்த 28-ம் தேதி கைது செய்தனர். அவர் மூலமாக சென்னை யில் இருந்து கொச்சி வழியாக டெல்லிக்கு ரூ.10 கோடி கொண்டு செல்லப்பட்டு சுகேஷிடம் தரப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நரேஷ் அனுப்பிய ரூ.10 கோடியை டெல்லியில் ஷாபைசால் என்பவர் பெற்று, இடைத்தரகர் சுகேஷிடம் கொடுத்துள்ளார்.
ஆதாரங்கள் சிக்கின
லஞ்சப் பணம் ரூ.10 கோடியை பரிமாற்றம் செய்த ஹவாலா தரகர்கள் நரேஷ், ஷாபைசால் ஆகியோர் சிக்கியிருப்பதால், அவர் களிடம் இருந்து இந்த வழக்குக்கு தேவையான முக்கிய ஆதாரங் களை டெல்லி போலீஸார் கைப் பற்றிவிட்டனர். இடைத்தரகராக செயல்பட்ட சுகேஷ் ஏற்கெனவே அனைத்து தகவல்களையும் வாக்குமூலமாக கொடுத்துவிட்டார். இதன்மூலம் டிடிவி தினகரனுக்கு எதிரான 90 சதவீத ஆதாரங்களை டெல்லி போலீஸார் கண்டுபிடித்துள் ளனர். இந்த ஆதாரங்களை நாளை (1-ம் தேதி) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க டெல்லி போலீஸார் முடிவு செய்திருப்பதாக கூறப்படு கிறது.
டெல்லி புறப்பட்டனர்
சென்னையில் விசாரணை முடிந்ததும் தினகரனையும், மல்லி கார்ஜுனாவையும் கொச்சி, பெங்களூரு அழைத்துச் சென்று விசாரிக்க போலீஸார் திட்டமிட்டி ருந்தனர். ஆனால், சென்னையில் நடந்த விசாரணையே 3 நாட்களை கடந்துவிட்டதால், இருவரையும் நேற்று மாலை விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்துச் சென்றனர். போலீஸ் காவல் முடிந்து இருவரையும் நாளை (1-ம் தேதி) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்ற னர்.
இரட்டை இலை சின்னம் பெறுவதற்கு தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், லஞ்சம் வாங்க முயன்ற தேர்தல் அதிகாரி யார் என்று இதுவரை பெயர் வெளியிடப்படவில்லை. அவரை யும் வழக்கில் சேர்க்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் குரல் எழுந்து வருகிறது.