இளம்பெண் சவுமியா பலாத்கார வழக்கில்: குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க முடியாது : கேரள அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
சவுமியா பாலியல் வழக்கில் கேரள அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஷாப்பிங் மாலில் பணியாற்றி வந்தவர் சவுமியா (23). கடந்த 2011, பிப்ரவரி 1-ம் தேதி எர்ணாகுளம் சோரனூர் பயணிகள் ரயிலில் மகளிர் பெட்டியில் அவர் பயணம் செய்தார். அப்போது அதே பெட்டி யில் ஏறிய தமிழகத்தின் கடலூரைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவர் சவுமியாவைத் திடீரென ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளினார்.
பின்னர் தானும் ரயிலில் இருந்து குதித்து, மயங்கிய நிலையில் கிடந்த சவுமியாவை பலாத்காரம் செய்துவிட்டு தப்பிச் சென்றார்.
பின்னர் பொதுமக்களால் மீட்கப்பட்ட சவுமியா திருச்சூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி, பிப்ரவரி 6-ம் தேதி உயிரிழந்தார். விசாரணை நடத்திய போலீஸார் கோவிந்தசாமியை கைது செய்து கொலை மற்றும் பாலியல் வழக்குப் பதிவு செய்தனர். 2012-ல் விரைவு நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. தொடர்ந்து கேரள உயர் நீதிமன்றமும் தீர்ப்பை உறுதி செய்தது.
இதையடுத்து கோவிந்தசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பரில் இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கோவிந்தசாமியை கொலை குற்றத்தில் இருந்து விடு வித்தது. சவுமியாவை பலாத்காரம் செய்வது மட்டுமே அவரது நோக்க மாக இருந்தது என தெரிவித்து உயர் நீதிமன்றத்தின் மரண தண்டனையை, ஆயுள் தண்டனை யாக குறைத்தது. இதனால் சவுமியாவின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து கோவிந்தசாமி யின் மரண தண்டனையை உறுதி செய்யக் கோரி கேரள அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான 6 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் நேற்று முன்தினம் விசார ணைக்கு வந்தது. அப்போது மனுவை ஆராய்ந்த நீதிபதிகள், ‘‘இந்த நீதிமன்றம் வரையறுத்த சட்டத் திட்டங்களுக்கு ஏற்ப சீராய்வு மனுவும், அது சார்ந்த ஆவணங்களும் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, இம்மனு தள்ளுபடி செய்யப்படு கிறது’’ என உத்தரவிட்டனர்.
கோவிந்தசாமியின் மரண தண்டனையை குறைத்தது தொடர் பான தீர்ப்பை விமர்சித்ததற்காக முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.