ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீடு தேடி வரும் 2000 ரூபாய் நோட்டு.. புதிய சேவையில் ஸ்னாப்டீல் !
ஸ்னாப்டீல் நிறுவனம் (Snapdeal) ‘கேஷ்@ஹோம்’ (Cash at Home) என்ற புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்து நேரடியாக டோர் டெலிவரி செய்வதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் இணையவழி வர்த்தகத்தில் கொடி கட்டி பறக்கும் ஆன்லைன் நிறுவனம் ஸ்னாப்டீல். இந்த நிறுவனம் (Snapdeal) ‘கேஷ்@ஹோம்’ (Cash at Home) என்ற புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி மூலம் வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் 2000 ரூபாய் நோட்டை ஆர்டர் செய்து தங்களது வீட்டிலேயே அதனை பெற்றுக்கொள்ளலாம்.
இந்த சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் இருந்து 1 ரூபாய் சேவை கட்டணமாக வசூலிக்கப்படும் எனவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. ஆர்டர் செய்த வாடிக்கையாளர்கள் 2000 ரூபாய் நோட்டை கொண்டு வருபவரிடம் உள்ள ஸ்வைப்பிங் மிஷினில் அவர்களது டெபிட் கார்டுகளை பயன்படுத்தி பணம் செலுத்தலாம் அல்லது ஃப்ரீசார்ஜ் (FreeCharge) கணக்கு மூலமாகவும் பணம் செலுத்தலாம்.
பண பரிமாற்றம் செய்து முடித்ததும் வாடிக்கையாளரிடம் பணம் ஒப்படைக்கப்படும். மேலும் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த அனைத்து வங்கி டெபிட் கார்டுகளையும் பயன்படுத்தலாம் என்றும் ஸ்னாப்டீல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சேவை தற்போது குர்கிராம் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் எனவும் ஸ்னாப்டீல் நிறுவனம் கூறியுள்ளது. வங்கிகளில் வரிசையில் நிற்பதை தவிர்க்கவும், பணம் இருக்கும் ஏடிஎம் மையங்களை தேடி அலைவதை தவிர்க்கவும் ஸ்னாப்டீல் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.